புரியாத புதிர்களை எளிமைப்படுத்தும் என்ஜினீயர்..!
புரியாத அறிவியல் கோட்பாடுகளுக்கும், கடினமான கணித சூத்திரங்களுக்கும் பிரேமானந்திடம் எளிய விளக்கங்கள் உள்ளன.
‘பிக் பேங்க் தியரி’, ‘பெர்னவ்லி கொள்கை’, ‘லாகிரதம்’... போன்ற புரியாத கோட்பாடுகளை, சுலபமாக புரியவைப்பதில் அவர் கில்லாடி. குறிப்பாக பாடப்புத்தகத்தில் இருக்கும் குழப்பமான பாடங்களுக்கு, வீடியோ விளக்கம் கொடுப்பது பிரேமானந்தின் ஸ்டைல். அதற்காகவே ‘லெட்ஸ் மேக் என்ஜினீயரிங் சிம்பிள்’ (எல்.எம்.இ.எஸ்.) என்ற சமூக அமைப்பை உருவாக்கி, அதன்மூலம் அறிவியலையும், கணிதத்தையும் எளிமையாக பயிற்றுவிக்கிறார். குழந்தை களின் புரியாத பாடங்களுக்கு, புதுப்புது வீடியோக்களின் மூலம் விளக்கமும் கொடுக்கிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் தினைக் குளம் கிராமம், பிரேமானந்தின் சொந்த ஊர். 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியிலேயே கல்வி பயின்றவர், பொறியியல் கல்வியை தேர்ந்தெடுத்து எலக்ட் ரானிக்ஸ் கம்யூனிகேஷன் படிப்பை முடித்திருக்கிறார். ஆரம்பத்தில் சென்னையில் பணியாற்றியவருக்கு, அமெரிக்காவிற்கு பறக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்தி கொண்ட பிரேமானந்த், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரிக்கும் குழுவில் அங்கம் வகித்தார். அந்த காலகட்டத்தில்தான் ‘லெட்ஸ் மேக் என்ஜினீயரிங் சிம்பிள்’ அமைப்பு உருவானது. அதுபற்றி அவரே பேசுகிறார்.
‘‘அமெரிக்காவில் பிசியாக பணிபுரிந்ததுபோக, கிடைக்கும் ஓய்வு நேரங்களில் குழுவாக அருகில் இருக்கும் பள்ளிக்கூடங்களுக்கு விசிட் அடிப்போம். அவ்வாறு சென்றபோதுதான் கல்வி கற்பித்தலையும், கல்வி கற்றலையும் முழுமையாக புரிந்து கொள்ளமுடிந்தது. அமெரிக்கர்கள் கல்வியை புத்தகத்தில் படிப்பதில்லை. அன்றாட வாழ்க்கையில் படிக்கிறார்கள். கதவு எப்படி திறக்கிறது என்பதில் தொடங்கி, விமானம் பறப்பது வரை அனைத்தையும் அவர்கள் அனுபவ கல்வியாக பயில்கிறார்கள். அதனால் கடினமான அறிவியல் கோட்பாடுகளும், அவர்களுக்கு சாதாரண விஷயமாக மாறிவிடுகிறது.
இந்த பார்முலாவை சரியாக புரிந்து கொண்டதால், அதை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்க ஆசைப்பட்டேன். அதன் முதல்கட்டமாக அரைகுறையாக படித்த அறிவியல் பாடங்களை முழுமையாகவும், எளிமையாகவும் கற்றுக்கொண்டு அதை யூ-டியூப் வீடியோவாக வெளியிட்டேன். ‘லெட்ஸ் மேக் என்ஜினீயரிங் சிம்பிள்’ (எல்.எம்.இ.எஸ்.) என்ற தலைப்பில் நான் கற்றுக்கொடுத்த அறிவியல் பாடங்களுக்கு மாணவர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததால், அமெரிக்காவில் இருந்தபடியே புதுப்புது அறிவியல் விளக்க வீடியோக்களை தயாரித்தேன். காலையில் அலுவலக வேலை, மாலையில் வீடியோ தயாரிப்பு பணிகள் என வாழ்க்கை பிசியாக நகர்ந்தது. விடுமுறை தினம் என்றால் முழுமூச்சாக வீடியோவுக் கான வேலைகளில் இறங்கிவிடுவேன். ஸ்கிரிப்ட் எழுதுவது, அறிவியல்-கணிதம் தொடர்பான தகவல்களை சேகரிப்பது, அனிமேஷன் வேலைகளில் ஈடுபடுவது என கற்றுக்கொடுக்கும் ஆர்வம் அதிகரித்துக்கொண்டே இருந்தது’’ என்றவர், இளைய சமூகத்திற்கு அறிவியலை கற்றுக்கொடுப்பதற்காக அமெரிக்க வேலையையும் உதறி இருக்கிறார்.
‘‘ஒருகட்டத்தில் சொகுசான அமெரிக்க வேலையை விட, ஆர்வமான அறிவியல் சோதனைகள் உயர்வாக தெரிந்தன. உடனே அமெரிக்காவிற்கு ‘குட்-பை’ சொல்லிவிட்டு தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டேன். இங்கு அறிவியல் மீது தீராத ஆர்வம் கொண்ட நண்பர்களை சேர்த்துக்கொண்டு, ‘எல்.எம்.இ.எஸ்.’ அமைப்பை வலுவாக்கினேன். அதன் மூலம் 80-க்கும் அதிகமான அறிவியல் புதிர்களுக்கு, வெகு விரைவில் விடை காண முடிந்தது. அதோடு கணித சூத்திரங்களையும் எளிமைப்படுத்தினோம்’’ என்றார், பிரேமானந்த்.
ஆரம்பத்தில் வீடியோ வழியே கல்வி புகட்டியவர், தற்போது அரசு பள்ளிகளுக்கு நேரடியாக சென்று பாடம் சொல்லிக்கொடுக்கிறார். இவர் எளிமையாக அறிவியலை கற்பிக்கும் பாணி, பள்ளி மாணவர்களை மட்டுமின்றி ஆசிரியர்களையும் கவர்ந்திருக்கிறது.
‘‘புத்தகம் வாயிலாக ஒரு விஷயத்தை படித்து புரிந்து கொள்வதை விட, வீடியோ பார்த்து கற்றுக்கொள்வது மிக சுலபமானது. பல தனியார் பள்ளிகளும், வீடியோ வழி கல்விக்கு மாறிவிட்டனர். அரசு பள்ளிகளில் இதுபோன்ற செய்முறை விளக்கங்கள் குறைவு என்பதால் அதை ஈடுகட்ட நேரடியாக களத்தில் இறங்கினோம். அரசு பள்ளி மாணவர்கள், புதுப்புது கேள்விக் கணைகளால் எங்களை துளைத்து எடுத்தனர். அவர்களது சந்தேகங்களை தீர்த்து வைத்ததுடன், வீட்டில் இருந்தபடியே சிறுசிறு அறிவியல் சோதனைகளை செய்து பார்க்க உதவியாக ‘பிக் பேங்க் கிட்’ என்ற உபகரண பொருட்களையும் வழங்கு கிறோம். எங்களுடைய முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது’’ என்றவர், கருப்பு அரிசி நீக்கும் கருவியை பள்ளி மாணவியே உருவாக்கியதை நினைவுக்கூர்ந்தார்.
‘‘அரசு பள்ளியில் பயிலும் ஒரு மாணவிக்கு தினமும் அரிசி புடைப்பது பெரிய போராட்டமாக இருந்திருக்கிறது. கருப்பு அரிசியை நீக்கிவிட்டு சமைப்பதற்குள் பள்ளி வகுப்புகள் ஆரம்பித்துவிடுமாம். இதற்கு தீர்வு தேடி எங்களை நாடினாள். அவளுக்கு கருப்பரிசியை தேடி அகற்றும் சென்சார் வடிவமைப்பு பற்றி கற்றுக்கொடுத்து, அவளையே தயாரிக்க வைத்தோம். இன்று அவள் குறித்த நேரத்திற்கு பள்ளி செல்கிறாள். இதுதான் அறிவியலின் பயன்பாடு. நமக்கு தேவையானவற்றை நாமே தயாரிப்பதற்காகத்தான் அறிவியலை பயில்கிறோம். பயிற்றுவிக்கிறோம்’’ என்று பெருமிதப்படும் பிரேமானந்த், வரும் கல்வி ஆண்டில் நடைபெற இருக்கும் அறிவியல் கண்காட்சிகளில் ஏராளமான இளம் விஞ்ஞானிகளை புதுப்புது படைப்புகளோடு பார்க்கலாம் என்று உறுதியளிக்கிறார். அதோடு என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களுக்கு அறிவுரையும் வழங்குகிறார்.
‘‘படித்து முடித்து வெளிவரும் ஒவ்வொரு என்ஜினீயரிங் மாணவனும் இளம் தொழிலதிபராகவே வெளிவரவேண்டும். அதுவே சிறப்பானதும் கூட. ஏதாவது ஒரு ஐ.டி.கம்பெனியில் பணியாற்றினால் போதும் என்ற மனநிலையில் இருந்து மாறுபட்டு, கற்றுக்கொண்ட பொறியியல் தொழில்நுட்பத்தை வைத்து தொழில் தொடங்கி முன்னுக்கு வர முயற்சிக்கவேண்டும். ‘ஸ்டார்ட்-அப்’ எனப்படும் சிறு தொழில் முனைவு பற்றி என்ஜினீயரிங் மாணவர்கள் யோசிப்பதே இல்லை. இத்தகைய முயற்சிகளில் உருவானதுதான் பேஸ்புக். அதுமட்டுமா..? மைக்ரோசாப்ட், கூகுள், யாகூ, வேட்பிரஸ், டெல், ஆங்கிரி பேர்ட் விளையாட்டு, ஸ்னாப் சாட், டிராப் பாக்ஸ், ஊபர்... என ஏராளமான நிறுவனங்களை பட்டியலிடலாம்.
சாதாரண புகைப்படத்தை வைத்து என்ன செய்ய முடியும் என்று மார்க் சுகர்பெர்க் நினைத்திருந்தால், ‘பேஸ்புக்’ என்ற சமூக வலைத்தளமும் பிறந்திருக்காது. அதன் மூலம் அவருக்கு பல மில்லியன் கோடி சொத்துகளும் சேர்ந்திருக்காது’’ என்று தன்னம்பிக்கையை விதைக்கும் பிரேமானந்த், ‘‘இல்லாத ஒன்றை உருவாக்குவது மட்டுமல்ல, இருக்கும் தொழில்நுட்பத்தை நவீன காலத்திற்கு ஏற்ப மேம்படுத்துவதும் என்ஜினீயர்களின் வேலை. அதை புரிந்து கொண்டால், என்ஜினீயரிங் மாணவர்களிடம் ‘ஸ்டார்ட்-அப்’ கலாசாரம் பெருகிவிடும். அதன்மூலம் சொந்த வருமானத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்தலாம்’’ என்ற கருத்துடன் விடைக்கொடுத்தார்.
மனைவி உமாமகேஸ் வரியுடன் சென்னையில் வசித்து வரும் பிரேமானந்திற்கு, அவரது அப்பா சேதுராஜன் மற்றும் அம்மா பத்மாதேவி ஆகியோர் உறு துணையாக உள்ளனர்.
Related Tags :
Next Story