இந்திய மணல் ஆலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்


இந்திய மணல் ஆலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி மத்திய மந்திரி   பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்
x
தினத்தந்தி 8 April 2018 4:30 AM IST (Updated: 7 April 2018 11:05 PM IST)
t-max-icont-min-icon

மணவாளக்குறிச்சியில் உள்ள இந்திய மணல் ஆலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துள்ளதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் இந்திய அருமணல் ஆலை, குமரி மாவட்டத்தில் இயங்கும் ஒரே ஒரு பொதுத்துறை நிறுவனம். இங்குள்ள கடற்கரையில் கிடைக்கும் தாதுப்பொருட்கள் மூலமாக பல அரிய வகையான மணல்கள் பிரித்தெடுக்கப்பட்டு வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த ஒரு ஆண்டு காலமாக தமிழக அரசால் போக்குவரத்து அனுமதி வழங்கப்படாததால் இந்த ஆலையின் இயக்கம் முற்றிலும் முடங்கி உள்ளது.

ஆயிரக்கணக்கான குடும்பங்களை வாழவைக்கும் இந்த நிறுவனம் முடக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதற்காக நான் குமரி மாவட்ட கலெக்டரை அழைத்துப்பேசி, இந்த ஆலை முடக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அதற்குரிய பரிந்துரைகளை மாநில அரசுக்கு உடனே அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினேன். மேலும் தமிழக அரசால் செயல்வடிவம் பெறாததை அறிந்தவுடன் தமிழக முதல்–அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், முதன்மைச் செயலாளர் ஆகியோரை நேரடியாக சந்தித்து இந்த ஆலை தொடர்ந்து இயங்குவதற்கு வழங்க வேண்டிய சான்றுகளை உடனடியாக வழங்க கேட்டுக்கொண்டதின்பேரில் தமிழக அரசால் சில ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி ஹர்‌ஷவர்தனை பாரதீய மஸ்தூர் சங்கத்தின் தமிழ் மாநில பொதுச்செயலாளர் முருகேசனுடன் நேரில் சென்று சந்தித்து, மணவாளக்குறிச்சியில் உள்ள இந்திய அருமணல் ஆலை சம்பந்தமாக விளக்கிக்கூறி, சி.ஆர்.இசட். (கடலோர கட்டுப்பாட்டு மண்டலம்) அனுமதி சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சுற்றுச்சூழல் அனுமதி பெற உரிய ஆவணங்களை சமர்பிக்க மத்திய வனத்துறை மந்திரி கேட்டுக்கொண்டதின் பேரில் மணவாளக்குறிச்சி இந்திய அருமணல் அதிகாரிகள், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி ஹர்‌ஷவர்தனை சந்திக்க நான் ஏற்பாடு செய்து கொடுத்தேன்.

இந்தநிலையில் நிர்வாகம் தொழிலாளர்களுக்கு தற்காலிக வேலை முடக்கம் கொடுப்பதற்காக மத்திய தொழிலாளர் துறையிடம் அனுமதி கேட்டு மனு செய்திருப்பதாக அறிந்தவுடன் ஆலையில் தற்காலிக வேலை முடக்கம் அனுமதி வழங்கக்கூடாது, ஆலை தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று மத்திய தொழிலாளர் துறை மந்திரி சந்தோஷ்குமார் கங்வாரையும், மத்திய தொழிலாளர் துறை செயலாளரையும் நேரில் சந்தித்து கேட்டுக்கொண்டேன். அதையடுத்து மத்திய தொழிலாளர் துறை மந்திரி, இந்த ஆலை தொடர்ந்து இயக்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

இந்தநிலையில் சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கப் பெறாததால் தொழிலாளர்களுக்கு உடனடியாக தற்காலிக வேலை முடக்கம் செயல்படுத்தப்படும் என இந்திய அருமணல் ஆலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதை அறிந்தவுடன் நான் கடந்த 5–ந் தேதி சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி ஹர்‌ஷவர்தனை சந்தித்து, அன்றைய தினமே சுற்றுச்சூழல் அனுமதி ஒப்புதலை பெற்றுக் கொடுத்துள்ளேன்.

இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Next Story