விருதுநகர் மாவட்டத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும், கலெக்டர் உத்தரவு


விருதுநகர் மாவட்டத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும், கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 8 April 2018 2:45 AM IST (Updated: 8 April 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

கோடைகாலத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர்,

கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் அனல் காற்றினால் ஏற்படும் பேரிடர்களை எதிர் கொள்வது தொடர்பான அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது;-

பொது மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு உள்ளாட்சி அமைப்பினர் உரிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பொதுமக்கள் குடிநீரினை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்துவதற்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

கோடைகாலத்தில் ஏற்படும் பேரிடர் நிகழ்வுகளை எந்தவித தாமதமுமின்றி சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். குடிநீர் வழங்கும் மோட்டார்களில் பழுது ஏற்பட்டால் உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும். நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்ட குடிநீர் திட்டப் பணிகளை கால தாமதமின்றி இந்த மாதத்திற்குள் முடிக்க வேண்டும். கோடைகாலத்தில் டெங்கு போன்ற நோய்கள் வராமல் தடுப்பதற்கு அனைத்து குடிநீர் வழங்கும் தொட்டிகளையும் சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும்.

குடியிருப்பை சுற்றியுள்ள கண்மாய்களில் தூர்வாரும் பணிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக ஆரம்பித்து, வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகளுக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும், விவசாயத்திற்கு தேவைப்படாத இடங்களில், எடுக்கப்படும் வண்டல் மண்ணை கொண்டு கண்மாய்களின் கரைகளை பலப்படுத்த வேண்டும். கண்மாய்களில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளும் போது, ஆங்காங்கே தூர்வாராமல், ஒரே சீராக தண்ணீரை அதிக அளவு சேமிப்பதற்கு ஏதுவாக தூர்வார வேண்டும்.

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் கோடைகாலத்தில் விலங்குகள் தண்ணீர்தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வராத வண்ணம், வனப்பகுதிகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீரை நிரப்புவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கால்நடை வளர்க்கும் விவசாயிகள் வறட்சியை சமாளிக்கும் விதமாக மாற்றுவழி தீவனங்களான அசோலா மற்றும் ஹைட்ரோபோனிக் போன்ற புதிய தொழில்நுட்ப உத்திகளை பயன்படுத்தி பசுந்தீவன உற்பத்தியை பெருக்கி கொள்ளவேண்டும். ஊரக வளர்ச்சி துறை மூலம் செயல்படும் நர்சரிகளில் மாற்றுவழி தீவனங்களை விசாயிகளின் பார்வைக்கு வைத்து கோடைகாலத்தில் விவசாயிகள் கால்நடைகளுக்கு பயன்படுத்திட போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.

நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் துப்புரவு பணியாளர்களை கொண்டு தினசரி குறித்த நேரத்தில் உடனுக்குடன் குப்பைகளை அகற்ற வேண்டும். சேகரிக்கப்பட்ட குப்பைகளை கிடங்குகளில் அளவுக்கு அதிகமாக சேமித்து வைக்காமல் உடனுக்குடன் மறுசுழற்சி பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்கும் வண்ணம், அனைத்து கடைகளிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பைகள் இருந்தால் அபராதம் விதிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்த்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமாரி, பேரிடர் மேலாண்மை தனி தாசில்தார் பாண்டிசங்கர்ராஜ் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story