ஊட்டியில் அதிகாரிகள் அதிரடி சோதனை: காலாவதியான இறைச்சியை ஓட்டல்களில் சமைத்து விற்பனை செய்தது கண்டுபிடிப்பு


ஊட்டியில் அதிகாரிகள் அதிரடி சோதனை: காலாவதியான இறைச்சியை ஓட்டல்களில் சமைத்து விற்பனை செய்தது கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 8 April 2018 3:00 AM IST (Updated: 8 April 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் உள்ள ஓட்டல்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது காலாவதியான இறைச்சியை சமைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றிய புகார்களை ‘வாட்ஸ் அப்’ மூலம் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஊட்டி,

ஊட்டியில் தற்போது கோடை சீசன் தொடங்கி உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தர தொடங்கி உள்ளனர். அவர்கள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டு உணவு சாப்பிடுவதற்காக ஓட்டலுக்கு செல்கின்றனர். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அசைவ உணவுகளை விரும்புகிறார்கள். பல ஓட்டல்களில் பாதுகாக்கப்பட்ட கண்ணாடி குடுவைக்குள் தந்தூரி சிக்கன் தயாராகிறது.

இதுபோன்ற அசைவ உணவுகளை சாப்பிடும் சிலருக்கு வயிற்று வலி, வாயுக்கோளாறு போன்றவை ஏற்படுகிறது. அதற்காக சுற்றுலா பயணிகள் மருந்து, மாத்திரைகளை வாங்கும் போது, காலாவதியான உணவு பொருட்களை சாப்பிட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.

இதையடுத்து நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் கருணாநிதி தலைமையில் ஊட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் நேற்று திடீர் என அதிரடியாக சோதனை மேற்கொண் டனர். அப்பகுதியில் உள்ள 13 ஓட்டல்களில் இந்த சோதனை நடந்தது.

அப்போது ஓட்டல்களில் காலாவதியான தந்தூரி சிக்கன், மீன், மட்டன் ஆகிய இறைச்சிகள் சமைத்து விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 13 கிலோ காலாவதியான இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு, அதனை கிருமி நாசினி ஊற்றி அழித்தனர்.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் கருணாநிதி கூறியதாவது:-

ஊட்டிக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தருவதால், அவர்களுக்கு சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான உணவுகள் வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. அதன்படி, மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் புகாரின் அடிப்படையில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி நடந்த சோதனையில் கெட்டுப்போன சிக்கன், மட்டன், மீன் போன்ற இறைச்சி உணவுகளை பறிமுதல் செய்து அழித்து உள்ளோம். அந்த ஓட்டல்களின் உரிமையாளர்களை எச்சரித்து நோட்டீசு கொடுக்கப்பட உள்ளது. தொடர்ந்து இதுபோன்ற உணவுகள் விற்பனை செய்தால் ஓட்டலுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கெட்டுப்போன இறைச்சி உணவுகளை சாப்பிட்டால் வயிற்று புண், தோல் வியாதி, வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. மேலும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. உணவு விடுதிகள் மட்டும் அல்ல. கடைகளில் உள்ள குளிர்பானங்கள், சிப்ஸ் போன்ற பொருட்கள் காலாவதியாக விற்பனை செய்தால் அவை பறிமுதல் செய்யப்படுவதோடு, பொருட்கள் அழிக்கப்படும்.

இதுகுறித்த புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு புகைப்படமாகவோ அல்லது குறுஞ்செய்தி மூலமாகவோ பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தெரிவிக்கலாம். எனவே, கடை மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் தரமான உணவுகளை சுற்றுலா பயணிகளுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story