சுகாதாரத்துறை பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல் திடீர் ரத்து: எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்


சுகாதாரத்துறை பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல் திடீர் ரத்து: எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
x
தினத்தந்தி 8 April 2018 3:30 AM IST (Updated: 8 April 2018 1:18 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் சுகாதாரத்துறை பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல் திடீரென்று ரத்து செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போ ராட்டம் நடைபெற்றது.

கோவை

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு 4 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 765 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களுக்காக முதல் கட்ட தேர்தல் கடந்த 2-ந் தேதி நடைபெற்றது. 2-ம் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது.கோவை ரேஸ்கோர்ஸ் பொது சுகாதார துறை பணியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 395 வாக்காளர்கள் உள்ளனர். நிர்வாக குழு உறுப்பினர் பதவிக்கு 23 பேர் போட்டியிட்டனர். வாக்காளர்கள் நேற்று காலை ஓட்டுப்போட வந்தனர்.

அப்போது அறிவிப்பு பலகையில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக நோட்டீசு ஒட்டப்பட்டு இருந்தது. அதில் ‘நிர்வாக குழு உறுப்பினர்களின் தேர்தல் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை காரணமாக நிறுத்தி வைக்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த அறிவிப்பில் தேர்தல் அலுவலர் கையெழுத்திட்டு இருந்தார்.

ஓட்டுப் போட உறுப்பினர்கள் வந்த நிலையில் தேர்தல் ரத்து என்று அறிவிப்பு பலகையில் நோட்டீசு ஒட்டப்பட்டு இருந்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்

இதையடுத்து அவர்கள் சுகாதாரத்துறை அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். அவர்கள், தங்களுக்கு விருப்பமானவர்களை தேர்வு செய்வதற்காக தேர்தலை ரத்து செய்து உள்ளனர். எனவே கலைந்து செல்ல மாட்டோம் என்றனர். இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இது குறித்து நிர்வாக குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட யுவராஜ் கூறியதாவது-

சுகாதாரத்துறை பணியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு காலை 8 மணிக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் காலை 7 மணிக்கே வாக்காளர்கள் வந்து விட்டனர். ஆனால் காலை 8 மணி வரை தேர்தல் அதிகாரி வரவில்லை. இது குறித்து அங்கு இருந்த ஊழியரிடம் கேட்ட போது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் தேர்தல் அதிகாரி போலீஸ் பாதுகாப்பு கேட்க சென்றுள்ளார் என்றார். அதன்பிறகு தேர்தலை ரத்து செய்து நோட்டீஸ் ஒட்டியதில் அரசியல் குறுக்கீடு உள்ளது என்று கருதுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து, தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, கலெக்டர் ஹரிகரனிடமும் சிலர் மனு கொடுத்தனர். தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் அந்த வாக்குப்பதிவு மையம் வெறிச்சோடி காணப்பட்டது. 

Next Story