வம்பனில் நடந்த ஜல்லிக்கட்டில் 1050 காளைகள் சீறிப்பாய்ந்தன 28 பேர் காயம்


வம்பனில் நடந்த ஜல்லிக்கட்டில் 1050 காளைகள் சீறிப்பாய்ந்தன 28 பேர் காயம்
x
தினத்தந்தி 8 April 2018 4:15 AM IST (Updated: 8 April 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

திருவரங்குளம் அருகே வம்பனில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 1050 காளைகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து சென்றன. இதில் மாடுபிடி வீரர்கள் 28 பேர் காயம் அடைந்தனர்.

திருவரங்குளம்,

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே வம்பன் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். அதேபோல இந்தாண்டுக்கான திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த ஊர்பொதுமக்கள், விழாக்குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி வம்பனில் வாடி வாசல் அமைக்கப்பட்டு அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தினர் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு அதற்கான அனுமதியை வழங்கினர்.

ஜல்லிக்கட்டு

அதனை தொடர்ந்து நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதற்காக கொண்டு வரப்பட்ட காளைகளை கால்நடை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். மாடுபிடி வீரர்களுக்கும், மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். இதில் திருச்சி, தஞ்சாவூர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 1050 காளைகள் பங்கேற்றன. ஜல்லிக்கட்டை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்க முன்வரவில்லை. தொடர்ந்து ஒவ்வொரு காளையாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.

28 பேர் காயம்

ஜல்லிக்கட்டில் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை 220 மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களின் கையில் சிக்காமல் சீறிப்பாய்ந்து சென்றன. சில காளைகள் மாடுபிடிவீரர்களுக்கு சவால் விட்டு களத்தில் நின்று ஆட்டம் காட்டின. இதை பார்த்து பார்வையாளர்கள் உற்சாகமடைந்தனர். காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 28 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பரிசு

காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. இதில் தங்கம், வெள்ளி காசுகள், சைக்கிள், பீரோ, கட்டில் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ், ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. மெய்யநாதன்,வருவாய்த்துறை அதிகாரிகள், சுற்று வட்டார கிராமபொதுமக்கள், இளைஞர்கள் கண்டுகளித்தனர். ஜல்லிக்கட்டையொட்டி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை மாஞ்சான்விடுதி ஊராட்சி, கொத்தக்கோட்டை ஊராட்சி பொதுமக்கள் செய்திருந்தனர். 

Next Story