வீடுகளை வாடகைக்கு எடுத்து போகியத்திற்கு விட்டு ரூ.1 கோடி மோசடி, வாலிபர் கைது


வீடுகளை வாடகைக்கு எடுத்து போகியத்திற்கு விட்டு ரூ.1 கோடி மோசடி, வாலிபர் கைது
x
தினத்தந்தி 8 April 2018 5:00 AM IST (Updated: 8 April 2018 2:00 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் வீடுகளை வாடகைக்கு எடுத்து போகியத்திற்கு விட்டு ரூ.1 கோடிக்கும் மேலாக நூதனமாக மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி வெங்கட்டாநகர் பகுதியை சேர்ந்தவர் விஜய் (வயது 33). வீடுகளை போகியத்திற்கு விடும் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். உப்பளம் கோலாஸ் நகர் ஜான் பிரிட்டோ வீதியில் வசித்து வரும் சுஷ்மா பட்டேல்(28) போகியத்திற்கு வீடு கேட்டு விஜய் நடத்தி வந்த நிறுவனத்தை நாடினார். அப்போது அவர், ரூ.4 லட்சத்தை பெற்றுக்கொண்டு புதுவை ஷாஜி வீதியில் உள்ள ஒரு வீட்டை போகியத்திற்கு விட்டு அதற்கான ஆவணங்களை தயார் செய்து சுஷ்மா பட்டேலிடம் கொடுத்தார்.

இதன்பின் அந்த வீட்டில் ஒரு ஆண்டுகள் குடியிருந்த சுஷ்மா பட்டேல் சொந்த வேலை காரணமாக வெளியூர் சென்றார். சில மாதங்கள் அங்கு தங்கி இருந்து விட்டு மீண்டும் அவர் புதுச்சேரி வந்தார். ஷாஜி வீதியில் ஏற்கனவே போகியத்திற்கு எடுத்து இருந்த தனது வீட்டிற்கு சென்றார். ஆனால் அங்கு வேறு நபர்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அவர் விஜய்யிடம் இதுகுறித்து விவரம் கேட்டார். அப்போது அவர், இந்த வீட்டில் நீங்கள் இல்லை என்பதால் நான் வேறு நபருக்கு போகியத்திற்கு விட்டு விட்டேன். போகியத்துக்காக நீங்கள் கொடுத்த பணத்தை திரும்பத் தருவதாக விஜய் தெரிவித்தார்.

இதன்பின் ரூ. 1 லட்சத்தை மட்டும் சுஷ்மா பட்டேலிடம் கொடுத்து விட்டு மீதி பணத்தை தராமல் இழுத்தடித்தார். 4 மாதங்களாகியும் பணத்தை தராததால் விஜய் மீது ஒதியஞ்சாலை போலீசில் சுஷ்மா பட்டேல் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விஜய்யை கைது செய்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்து 35க்கும் மேற்பட்டோர் ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். தங்களுக்கு சொந்தமான வீடுகளை வாடகைக்கு எடுத்து அதனை தங்களுக்கு தெரியாமலேயே வேறு நபர்களுக்கு போகியத்திற்கு விட்டு பணத்தை விஜய் மோசடி செய்திருப்பதாக புகார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ரூ.1 கோடி அளவிற்கு விஜய் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து விஜய்யை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

வீடுகளை போகியத்துக்கு விட்டு மோசடியில் ஈடுபட்டவரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொண்ட ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோரை டி.ஐ.ஜி. ராஜீவ் ரஞ்சன் பாராட்டினார். 

Next Story