புதுவையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்: அடகுக்கடைக்காரரை கொன்று 9 கிலோ நகைகள் கொள்ளையில் 3 பேர் கைது


புதுவையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்: அடகுக்கடைக்காரரை கொன்று 9 கிலோ நகைகள் கொள்ளையில் 3 பேர் கைது
x
தினத்தந்தி 8 April 2018 4:00 AM IST (Updated: 8 April 2018 2:00 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் அடகுக் கடைக்காரரை கொன்று 9 கிலோ நகைகளை கொள்ளையடித்த வழக் கில் 4 ஆண்டுகளுக்குப் பின் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி நெல்லித்தோப்பு மறைமலையடிகள் சாலையில் ராஜேஷ் ஷியாம் என்பவர் நகை அடகுக்கடை நடத்தி வந்தார். கடந்த 4.4.2014 அன்று இவரது கடைக்குள் புகுந்து ராஜேஷ் ஷியாமை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். பின்னர் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அடகு கடையில் இருந்து 9 கிலோ எடையுள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு சென்றனர். இதன் அப்போதைய மதிப்பு ரூ. 1 கோடி என்று கூறப்படுகிறது.

இந்த கொலை கொள்ளை சம்பவம் புதுச்சேரியில் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். ஆனால் துப்பு எதுவும் துலங்காமல் இருந்து வந்தது.

இந்தநிலையில் கொலையாளிகளை கைது செய்ய கோரி நகை அடகு கடை உரிமையாளர் சங்கத்தினர் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர். தொடர்ந்து விசாரித்து வந்தநிலையில் இந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக எந்த துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க டி.ஐ.ஜி. ராஜீவ் ரஞ்சன் சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் கொலை, கொள்ளை சம்பவம் குறித்து துருவி, துருவி விசாரணை நடத்தினார்கள்.

இந்தநிலையில் திலாஸ்பேட்டை சண்முகாபுரத்தை சேர்ந்த டிரைவர்களான கோபி, சுயம்ஜோதி, அருண் ஆகியோர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுடைய நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது ராஜேஷ் ஷியாமை கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்தது அவர்கள் தான் என்பது தெரியவந்தது.

உடனடியாக அனைத்து நகைகளையும் விற்றால் சிக்கி விடுவோம் என்று கருதி கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை உறவினர்கள் மூலமாக சிறிது சிறிதாக எடுத்து விற்பனை செய்ததும் அந்த பணத்தை வைத்து பல இடங்களில் சொத்துக்கள் வாங்கி குவித்ததும் டிரைவர்கள் என்பதால் லாரி, கார்கள் என வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் மூலம் நகை அடகுக்கடை உரிமையாளர் ராஜேஷ் ஷியாமை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்தது அவர்கள் தான் என்பதை உறுதி செய்ததை தொடர்ந்து கோபி, சுயம்ஜோதி, அருண் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தை வைத்து வாங்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த வழக்கில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று தெரிகிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு அடகுக் கடைக்காரர் கொலை வழக்கில் துப்பு துலக்கி குற்றவாளிகளை போலீசார் கைது செய்த சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story