நெய்வேலி, எளாவூர் ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம்


நெய்வேலி, எளாவூர் ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம்
x
தினத்தந்தி 8 April 2018 4:00 AM IST (Updated: 8 April 2018 2:03 AM IST)
t-max-icont-min-icon

நெய்வேலி ஊராட்சி அன்னதான காக்கவாக்கம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள நெய்வேலி ஊராட்சி அன்னதான காக்கவாக்கம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஊத்துக்கோட்டை தனி தாசில்தார் லதா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து 27 மனுக்களை பெற்றுக்கொண்டார். வருவாய் ஆய்வாளர் மகேந்திரன், கூட்டுறவு சங்கத்தலைவர் பாலாஜி, கிராம நிர்வாக அதிகாரி ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முதியோர் உதவித்தொகை, ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், பட்டா கோருதல் உள்ளிட்ட 27 கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடம் இருந்து ஊத்துக்கோட்டை தனி தாசில்தார் லதா பெற்றுக்கொண்டார். இதில் 7 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. 20 மனுக்கள் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உடனடி தீர்வு காணப்பட்ட 7 மனுக்களுக்கு அதற்கான ஆணையை தனி தாசில்தார் லதா பயனாளிகளுக்கு வழங்கி பேசினார்.

முன்னதாக அனைவரையும் கிராம உதவியாளர்கள் தேவேந்திரன், சரவணன், பாஸ்கரன், ராமு, மோகன் ஆகியோர் வரவேற்றனர். முடிவில் சங்கர் நன்றி கூறினார்.

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த ஆதனூர் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் ரமேஷ் தலைமை தாங்கினார். குன்றத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் எழிச்சூர் இ.வி. ராமச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் அரி, ஆதனூர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ. கே.பழனி கலந்து கொண்டு அம்மா திட்ட முகாமை தொடங்கி வைத்தார். பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 42 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இதில் 22 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதி மனுக்கள் விசாரித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முகாமில் 22 பேருக்கான பட்டா நகலையும், 7 பேருக்கான இறப்பு சான்றிதழையும் தாசில்தார் வழங்கினார். இதில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஒரத்தூர் என்.டி. சுந்தர், ஆதனூர் கிராம நிர்வாக அதிகாரி உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் தாசில்தார் ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது. சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தார் லலிதா, வருவாய் ஆய்வாளர் கலைப்பாண்டியன், கிராம நிர்வாக அதிகாரி ஆர்.அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு உதவித்தொகை தொடர்பாக 43 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 3 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முன்னதாக கிராம உதவியாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். முடிவில் ஊராட்சி செயலாளர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தை சேர்ந்த போந்தூர் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் மண்டல துணை தாசில்தார் கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. வருவாய் ஆய்வாளர் சசிகுமார், வட்ட வழங்கல் அலுவலர் மலர்விழி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். ஊராட்சியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு முதியோர் உதவித்தொகை, ரேஷன்கார்டு, பட்டா சிட்டா, பெறுவதற்கான மனுக்களை அளித்தார்கள்.

இதில் கிராம நிர்வாக அதிகாரிகள் குமார், செண்பகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். முகாமில் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான 20 மனுக்களும், ஸ்மார்ட் கார்டு கேட்டு 10 மனுக்களும் பெறப்பட்டது.

Next Story