பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது


பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
x
தினத்தந்தி 8 April 2018 4:51 AM IST (Updated: 8 April 2018 4:54 AM IST)
t-max-icont-min-icon

முக்கிய நீர் ஆதாரமான பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

பவானிசாகர்,

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது பவானிசாகர் அணையாகும். 120 அடி உயரத்தில் மண்ணால் கட்டப்பட்ட இந்த அணையில் சகதி 15 அடி போக 105 அடிக்கு தண்ணீர் தேக்கிவைக்க முடியும். நீலகிரி மலைப்பகுதியே அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாகும்.

பவானிசாகர் அணையில் இருந்து பிரிக்கப்படும் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, கீழ்பவானி, காலிங்கராயன் வாய்க்கால்கள் மூலம் சுமார் 2½ லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதேபோல் ஈரோடு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளின் குடிநீர் தேவையையும் பவானிசாகர் அணைதான் பூர்த்தி செய்கிறது.

கடந்த சில மாதங்களாக நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்யாததால், அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் குறைந்தது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நீலகிரி பகுதியில் நல்ல மழை பெய்தது. இதனால் கோவை மாவட்டம் பில்லூரில் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இதனால் நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 1,742 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 54.66 அடியாக இருந்தது. இதற்கிடையே மழை நின்றதால் பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவது நிறுத்தப்பட்டது. அதனால் நேற்று அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 316 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

Next Story