தாமதமாக கற்பழிப்பு புகார் அளிப்பதால் பாதிக்கப்பட்ட பெண் பொய் கூறுவதாக கருத முடியாது


தாமதமாக கற்பழிப்பு புகார் அளிப்பதால் பாதிக்கப்பட்ட பெண் பொய் கூறுவதாக கருத முடியாது
x
தினத்தந்தி 8 April 2018 4:53 AM IST (Updated: 8 April 2018 4:53 AM IST)
t-max-icont-min-icon

தாமதமாக கற்பழிப்பு புகார் அளிப்பதால் பாதிக்கப்பட்ட பெண் பொய் கூறுவதாக கருதமுடியாது என மும்பை ஐகோர்ட்டு கூறியுள்ளது.

மும்பை,

நாசிக், திரிம்பகேஷ்வர் பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 15-ந் தேதி இளம்பெண் ஒருவர் 4 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக தத்தாரே கோரடே, கணேஷ் பர்தேஷி, பின்டு, கணேஷ் சோலே ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நாசிக் செசன்ஸ் கோர்ட்டு 4 பேருக்கும் தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது.

இதை எதிர்த்து 4 பேரும் மும்பை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்து இருந்தனர். விசாரணையின் போது குற்றவாளிகள் சார்பில் ஆஜரான வக்கீல், பாதிக்கப்பட்ட பெண் சம்பவம் நடந்த 2 நாட்கள் கழித்து தான் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த பெண் தனது காதலனுடன் நெருக்கமாக இருந்ததை 4 பேரும் பார்த்ததால் அவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறும்போது, “தாமதமாக கற்பழிப்பு புகார் அளித்ததால் பாதிக்கப்பட்ட பெண் பொய் கூறுகிறார் என கருத முடியாது. மிக அரிதாக தான் இந்திய பெண்கள் பொய் பாலியல் புகார்களை அளிக்கின்றனர்” என கூறினர்.

மேலும் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து 4 பேருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கிய செசன்ஸ் கோர்ட்டின் தீர்ப்பை நீதிபதிகள் உறுதி செய்தனர்.


Next Story