18 வயது நிரம்பிய திருமணமாகாத பெண் பராமரிப்பு செலவை தந்தையிடம் கோரலாம்


18 வயது நிரம்பிய திருமணமாகாத பெண் பராமரிப்பு செலவை தந்தையிடம் கோரலாம்
x
தினத்தந்தி 8 April 2018 4:57 AM IST (Updated: 8 April 2018 4:57 AM IST)
t-max-icont-min-icon

18 வயது நிரம்பிய திருமணமாகாத பெண் பராமரிப்பு செலவை தனது தந்தையிடம் கோரலாம் என மும்பை ஐகோர்ட்டு உத்தர விட்டுள்ளது.

மும்பை,

மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 1997-ம் ஆண்டு தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். இதில் அந்த பெண்ணின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு பிறந்த 2 ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தையின் பராமரிப்பு செலவை அவரது கணவர் ஏற்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. அவரும் ஒவ்வொரு மாதமும் குழந்தைகளுக்கான பராமரிப்பு செலவை வழங்கி வந்தார்.

இந்தநிலையில் அந்த பெண்ணின் கணவர் குழந்தைகள் 18 வயது நிரம்பியதும் அவர்களின் பராமரிப்பு செலவை தான் ஏற்க முடியாது என கூறி அவர்களுக்கு மாதாமாதம் வழங்கி வந்த தொகையை நிறுத்திக் கொண்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், தனது மகளுக்கு 18 வயது நிரம்பிய போதிலும் அவள் இன்னமும் பொருளாதார ரீதியாக பெற்றோரையே சார்ந்துள்ளார். 2 சகோதரர்களும் அவளுக்கு உதவும் நிலையில் இல்லை. இதனால் அவள் உயர்கல்வியை முடிக்கும் வரையில் தொடர்ந்து பராமரிப்பு செலவை வழங்குமாறு அவளது தந்தைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால் உடல் மற்றும் மன ரீதியில் ஆரோக்கியமான பெண் 18 வயது நிரம்பிய பின்பு தந்தையிடம் பராமரிப்பு தொகையை கோர முடியாது என கூறி குடும்பநல கோர்ட்டு அந்த மனுவை நிராகரித்தது.

இதைத்தொடர்ந்து அவர் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு ஐகோர்ட்டு நீதிபதி பாரதி டாங்ரே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விவாகரத்து பெற்ற கணவர் அவரது மகள் 18 வயது நிரம்பி திருமணம் ஆகாமல் பொருளாதார ரீதியாக பெற்றோரை சார்ந்து இருந்தால் தொடர்ந்து பராமரிப்பு செலவை வழங்க வேண்டும், எனவே குடும்பநல கோர்ட்டு மனுதாரரின் கோரிக்கையை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டார். 

Next Story