உளவுத்துறையை சித்தராமையா தவறாக பயன்படுத்துகிறார் குமாரசாமி குற்றச்சாட்டு


உளவுத்துறையை சித்தராமையா தவறாக பயன்படுத்துகிறார் குமாரசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 8 April 2018 5:33 AM IST (Updated: 8 April 2018 5:33 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது உளவுத்துறையை சித்தராமையா தவறாக பயன்படுத்தி வருவதாக குமாரசாமி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலில் மைசூரு சாமுண்டீஸ்வரி தொகுதியில் முதல்-மந்திரி சித்தராமையா போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது தொடர்பாக தகவல்களை திரட்டி உளவுத்துறையினர் அறிக்கை தயார் செய்து வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து ஜனதாதளம்(எஸ்) மாநில தலைவர் குமாரசாமியிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

முதல்-மந்திரி சித்தராமையா தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதாக எங்கள் கட்சி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை போலீஸ் வாகனங்களில் எடுத்து சென்று வழங்குவதாக தேர்தல் ஆணையத்திடம் முன்னாள் பிரதமர் தேவேகவுடா புகார் அளித்துள்ளார். தற்போது முதல்-மந்திரி சித்தராமையா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியும் சாமுண்டீஸ்வரி தொகுதியில் அவரது வெற்றி, தோல்வி குறித்தும், போட்டியிடுவதா? வேண்டாமா? என்பது தொடர்பாகவும் உளவுத்துறை மூலமாக ஆய்வு நடத்தியுள்ளார்.

உளவுத்துறையினர் தயாரித்து கொடுத்த அறிக்கை தற்போது வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் தேர்தல் நடத்தை விதிமுறைகளை சித்தராமையா மீறி இருப்பதும், உளவுத்துறையை தவறாக பயன்படுத்தி இருப்பதும் உறுதியாகி உள்ளது. இதுதொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா மீது தேர்தல் ஆணையத்திடம் ஜனதாதளம்(எஸ்) சார்பில் புகார் அளிக்கப்படும். உளவுத்துறை மட்டும் அல்ல, அனைத்து துறைகளிலும் முதல்-மந்திரி சித்தராமையா தலையிட்டு வருகிறார். அவர் சொல்வதை கேட்டு தான் அரசு அதிகாரிகள் செயல்படுகிறார்கள்.

என்னை தோற்கடிப்பது எப்படி? என்று சித்தராமையாவுக்கு தெரியும் என தெரிவித்துள்ளார். நான் வெற்றி பெறுவதை சித்தராமையாவால் ஒரு போதும் தடுக்க முடியாது. நான் தோற்று விடுவேன் என்ற பயத்தில் தான் 2 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக ஜெகதீஷ் ஷெட்டர் சொல்லி இருக்கிறார். எனக்கு தோல்வி பயம் இல்லை.

தொண்டர்கள் வலியுறுத்துவதால் தான் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறேன். எனது கட்சி தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளேன். இது நான் எடுத்த முடிவு அல்ல. தொண்டர்கள் எடுத்த முடிவு. 115 தொகுதிகளில் வெற்றி பெறுவது தான் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் நோக்கம். வடகர்நாடக மாவட்டங்களில் மட்டும் 45 தொகுதிகளில் வெற்றி பெற திட்டம் வகுத்துள்ளோம். ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு குமாரசாமி கூறினார். 

Next Story