ரெயில் மோதி பெண் டிக்கெட் பரிசோதகர் பலி தண்டவாளத்தில் நடந்து வந்த போது பரிதாபம்


ரெயில் மோதி பெண் டிக்கெட் பரிசோதகர் பலி தண்டவாளத்தில் நடந்து வந்த போது பரிதாபம்
x
தினத்தந்தி 9 April 2018 4:30 AM IST (Updated: 8 April 2018 10:10 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் ரெயில் நிலையம் அருகே ரெயில் மோதி பெண் டிக்கெட் பரிசோதகர் பலியானார். தண்டவாளத்தில் நடந்து வந்த போது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

நாகர்கோவில்,


நெல்லை ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பாளராக பணியாற்றி வருபவர் மணிகண்டன். இவருடைய மனைவி மீரா (வயது 37). இவர் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வந்தார். கணவன்–மனைவி இருவரும் நெல்லை ரெயில்வே குடியிருப்பில் தங்கியிருந்து பணியாற்றி வந்தனர். மீரா நேற்று பகல் வழக்கம் போல வேலைக்கு வருவதற்காக நாகர்கோவிலுக்கு புறப்பட்டார்.

இதற்காக திருச்சியில் இருந்து திருநெல்வேலி வழியாக நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையம் வரும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி பயணம் செய்தார். இந்த ரெயில் கோட்டார் ரெயில் நிலையத்துக்கு வராது என்பதால் டவுன் ரெயில் நிலையத்தில் இறங்கி, பின்னர் கொல்லத்தில் இருந்து கன்னியாகுமரி வரும் மெமு ரெயிலில் ஏறி கோட்டார் ரெயில் நிலையத்துக்கு வர முடிவு செய்து இருந்ததாக கூறப்படுகிறது.


இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையம் அருகே உள்ள பறக்கின்கால் இந்திராநகர் வந்தபோது, மெமு ரெயில் டவுன் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுவிட்டது. இதனால் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் இந்திராநகர் ரெயில்வே கேட் அருகே நிறுத்தப்பட்டது. மெமு ரெயில் கடந்து சென்ற பின்னரே இந்த ரெயில் புறப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.

 இதனால் மீரா இந்திராநகரிலேயே இறங்கி கோட்டார் ரெயில் நிலையத்துக்கு நடந்தே வர முடிவு செய்தார். அதன்படி ரெயிலில் இருந்து இறங்கிய அவர் தண்டவாளத்தில் நடந்து வந்தார். அப்போது கைப்பை வைத்திருந்தார். இந்திராநகரில் உள்ள பறக்கின்கால்வாய் பாலத்தில் மீரா நடந்து வந்தபோது, எதிர்பாராத விதமாக அவருக்கு பின்னால் மெமு ரெயில் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீரா தண்டவாளத்தில் இருந்து இறங்க முயன்றுள்ளார். ஆனால் அவரால் முடியவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் மீரா மீது ரெயில் பயங்கரமாக மோதியது.


இதனால் மீரா பாலத்தில் இருந்து சுமார் 10 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டு பாலத்தின் கீழ் உள்ள புதரில் விழுந்தார். ரெயில் மோதியதால் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மீரா பிணமாக கிடந்ததைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனே இதுபற்றி நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ரெயில்வே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று, புதரில் இறந்து கிடந்த மீராவின் உடலை மீட்டனர்.


அதைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து மீராவின் கணவர் மணிகண்டனுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். மனைவி இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் மற்றும் உறவினர்கள் உடனே நாகர்கோவிலுக்கு விரைந்து வந்தனர். வேலைக்கு சென்று வருவதாக கூறி விட்டு வந்த மனைவி பிணமாக கிடப்பதை பார்த்து மணிகண்டன் கதறினார். இதனையடுத்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

ரெயில் மோதி டிக்கெட் பரிசோதகர் மீரா இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


டிக்கெட் பரிசோதகரான மீரா நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையம் வருவதற்காக இந்திராநகர் அருகே இன்டர்சிட்டி ரெயிலில் இருந்து இறங்கி தண்டவாளத்தில் நடந்து வந்தார். ஆனால் பின்னால் மெமு ரெயில் வந்ததை அவர் கவனிக்க தவறிவிட்டார். இந்திராநகரில் உள்ள பறக்கின்கால்வாய் பாலத்தின் மேல் அவர் வந்தபோதுதான் ரெயில் வரும் சத்தம் கேட்டு பின்னால் திரும்பி பார்த்துள்ளார்.

ஆனால் அவர் நடந்து வந்த பறக்கின்கால்வாய் பாலம் மிகவும் குறுகலாக இருக்கும். பாலத்தில் ஓரம் ஒதுங்கி நின்றாலும் கூட ரெயில் மோதிவிடும். அந்த அளவுக்கு பாலம் குறுகியது என்பதால் எப்படியாவது பாலத்தை கடந்து விட வேண்டும் என்று மீரா ஓட்டம் பிடித்துள்ளார். ஆனால் துரதிஷ்ட வசமாக அவர் கையில் பெரிய கைப்பை வைத்திருந்ததால் அவரால் வேகமாக ஓட முடியவில்லை என்று கூறப்படுகிறது. எனவே தான் மீராவால் உயிர் தப்ப முடியவில்லை என்று போலீசார் கூறினர்.

Next Story