காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கடலூரில், அனுமதியின்றி போராட்டம் நடத்திய 17 பேர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கடலூரில், அனுமதியின்றி போராட்டம் நடத்திய முகநூல் நண்பர்கள் 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர், மாணவர்கள், தமிழ் அமைப் பினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதேபோல் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் முகநூல் நண்பர்கள் போராட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டனர். ஆனால் போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். இருப்பினும் அனுமதியின்றி போராட்டம் நடத்த போவதாக முகநூல் நண்பர்கள் தெரிவித்து இருந்தனர்.
இதனால் மஞ்சக்குப்பம் மைதானத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் 75-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை முகநூல் நண்பர்கள் போராட்டம் நடத்துவதற்காக மஞ்சக்குப்பம் மைதானத்தில் திரண்டு நின்றனர்.
பின்னர் அவர்கள் மஞ்சக்குப்பம் மைதானத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், கடலூர் மாவட்டத்துக்கு வர இருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.
உடன் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், போராட்டம் நடத்தி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆகவே உங்கள் அனைவரையும் கைது செய்கிறோம் என்று அவர்களிடம் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து கோஷமிட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட முகநூல் நண்பர்கள் 17 பேரை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்தும், குண்டு கட்டாக தூக்கியும் கைது செய்து, வேனில் ஏற்றினர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது.
கைது செய்யப்பட்ட அவர்கள் மஞ்சக்குப்பம் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் மஞ்சக்குப்பம் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய கோரியும் சிதம்பரம் அருகே உள்ள மணலூர் பஸ் நிறுத்தம் அருகே அப்பகுதி மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அப்பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story