விருத்தாசலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரெயில் மறியல்
வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை திரும்ப பெறக்கோரி விருத்தாசலத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 77 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம்,
வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை திரும்ப பெறக்கோரி விருத்தாசலத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 77 பேரை போலீசார் கைது செய்தனர்.
வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை திரும்ப பெறக்கோரியும், இந்த தீர்ப்புக்கு எதிராக தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் மேல் முறையீடு செய்ய கோரியும் தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியல், ரெயில் மறியல் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று விருத்தாசலத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மாவட்ட செயலாளர் கருப்புசாமி தலைமையிலும், மண்டல செயலாளர் திருமாறன், மாவட்ட துணை செயலாளர் திராவிடமணி, தொகுதி செயலாளர் அய்யாயிரம், மாவட்ட செய்தி தொடர்பாளர் பூக்கடைரவி, நகர செயலாளர் மணிமாறன் ஆகியோர் முன்னிலையிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று காலை விருத்தாசலம் ரெயில் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்து போகும் வகையில் திருத்தம் செய்து உத்தரவிட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை திரும்ப பெறக்கோரியும், தீர்ப்புக்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது காலை 11.30 மணியளவில் விருத்தாசலம் ரெயில் நிலைய 3-வது நடைமேடைக்கு வந்த சென்னை- குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் ரெயில் என்ஜின் மீது ஏறி நின்றபடியும், தண்டவாளத்தில் படுத்தபடியும் கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) வெங்கடேசன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன், ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமாவளவன் ஆகியோர் தலைமையிலான போலீசார் ரெயில் மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 77 பேரை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி புதுக்குப்பம் அம்பேத்கர் சதுக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். சிறுத்தை சிவா, வீரமுத்து, வைத்தியநாதன், பாபுஜி, செல்வமணி, ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைராஜ் வரவேற்புரையாற்றினார்.
இதில் மாநில நிர்வாகிகள் குணவழகன், வக்கீல் அன்பரசன், சங்க தமிழன், மேற்கு மாவட்ட பொருளாளர் துரை மருதமுத்து ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நகர நிர்வாகிகள் எம்.எஸ்.வேல், ராஜசேகர், தேசிங்கு, மோகன், கவுதமபுத்தர், நெய்வேலி தொகுதி செயலாளர் பாஷா பன்னீர், கம்மாபுரம் ஒன்றிய அமைப்பாளர் அசுரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செய்தி தொடர்பாளர் தமிழரசன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story