கிணத்துக்கடவு அருகே பள்ளத்தில் பாய்ந்த தனியார் பஸ்: மொபட் மீது மோதியதால் தொழிலாளி படுகாயம்


கிணத்துக்கடவு அருகே பள்ளத்தில் பாய்ந்த தனியார் பஸ்: மொபட் மீது மோதியதால் தொழிலாளி படுகாயம்
x
தினத்தந்தி 9 April 2018 3:00 AM IST (Updated: 9 April 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு அருகே வேகமாக வந்த பஸ் மொபட் மீது மோதியதில் தொழிலாளி படுகாயம் அடைந்தார். மோதிய வேகத்தில் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி பள்ளத்தில் பாய்ந்து நின்றது.

கிணத்துக்கடவு,

கிணத்துக்கடவு அருகே உள்ள தேவராயபுரத்தை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 60). கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை வேலைக்காக தனது மொபட்டில் கோவில்பாளையம் செல்வதற்காக எஸ்.மேட்டுப்பாளையம் பிரிவு அருகில் ரோட்டை கடந்தபோது கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வேகமாக வந்த தனியார் பஸ் மொபட் மீது மோதி விட்டு, நிலை தடுமாறி அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதிவிட்டு, நிற்காமல் ரோட்டோர பள்ளத்தில் பாய்ந்தது.

இதில் தனியார் பஸ்சின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது. இதில் மொபட்டை ஓட்டி வந்த பொன்னுச்சாமியின் கால் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது பற்றி தகவல் கிடைத்ததும் கிணத்துக்கடவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

விபத்தில் காயம் அடைந்த பொன்னுச்சாமியை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஏற்றி, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து, பெரியபோதுவை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் நந்தகோபால் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிரேன் வரவழைக்கப்பட்டு தனியார் பஸ்சை மீட்டனர். பின்னர் போக்குவரத்து சரியானது. 

Next Story