காவிரி பிரச்சினையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கபட நாடகம் ஆடுகிறார்கள் - ஜெ.தீபா குற்றச்சாட்டு


காவிரி பிரச்சினையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கபட நாடகம் ஆடுகிறார்கள் - ஜெ.தீபா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 9 April 2018 3:30 AM IST (Updated: 9 April 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

காவிரி பிரச்சினையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கபட நாடகம் ஆடுகிறார்கள் என்று ஜெ.தீபா குற்றம் சாட்டினார்.

மேட்டுப்பாளையம்,

ஜெ.தீபா அணி மற்றும் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாள் விழா, ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள கூட்டுறவு நகரில் நடந்தது. கோவை மாநகர், புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.

மாவட்ட தலைவர் ரவீந்திரன், மாவட்ட துணை செயலாளர் பாலகிருஷ்ணன், இணை செயலாளர் கமலவேணி, மகளிர் அணி செயலாளர் கோவை சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் ஞானபூமி செல்வம் வரவேற்றார். விழாவில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா கலந்து கொண்டு 1200 பேருக்கு தையல் எந்திரம் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா இறந்த பின்னர் அ.தி.மு.க.வை காப்பாற்ற நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் நான் அரசியலுக்கு வந்தேன். நான் தொடங்கி உள்ள கட்சியில் எனது நலனுக்காக எனது பெயர் வைக்கப்பட்டு உள்ளது என்று பலர் கூறி வருகிறார்கள். அது நிர்வாகிகள் பலர் கூறியதால்தான் கட்சியில் தீபா என்ற பெயரை சேர்த்தேன். எனது நலனுக்காக இல்லை.

நான் அரசியலுக்கு வந்ததே அ.தி.மு.க.வை மீட்பதற்காகதான். எனவே எத்தனை தடைகள் வந்தாலும் கண்டிப்பாக அ.தி.மு.க.வை மீட்டெடுப்பேன். பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு, தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருகிறது. அதை தட்டிக்கேட்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்வரவில்லை.

குறிப்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று பலர் போராடி வருகிறார்கள். ஆனால் பெயரளவுக்கு உண்ணாவிரதம் இருந்து மத்திய அரசை எதிர்ப்பதுபோன்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினார்கள். மத்திய அரசை எதிர்த்தால் தங்களின் பதவி பறிபோய்விடுமோ என்று நினைத்து, காவிரி பிரச்சினையில் இருவரும் கபட நாடகம் ஆடி வருகிறார்கள்.

மேலும் ஜெயலலிதா இருந்திருந்தால் டி.டி.வி.தினகரன் என்பவர் யார் என்றே தெரிந்து இருக்க முடியாது. நான் ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு என்னென்ன திட்டங்களை நிறைவேற்ற இருந்தாரோ, அந்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவேன். கண்டிப்பாக அ.தி.மு.க.வை கைப்பற்றி, தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் உயர்மட்டக்குழுவை சேர்ந்த மணி, வெங்கடாசலபதி, ராஜேஷ், முன்னாள் எம்.பி. ராஜா பரமசிவம், மேட்டுப்பாளையம் நகர செயலாளர் அலாவுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர பொருளாளர் இப்ராகிம் நன்றி கூறினார். 

Related Tags :
Next Story