ஐகோர்ட்டு உத்தரவுப்படி ராமேசுவரம் கோவில் நிலங்கள் மீட்கும் பணி, இணை ஆணையர் தகவல்


ஐகோர்ட்டு உத்தரவுப்படி ராமேசுவரம் கோவில் நிலங்கள் மீட்கும் பணி, இணை ஆணையர் தகவல்
x
தினத்தந்தி 9 April 2018 3:15 AM IST (Updated: 9 April 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

ஐகோர்ட்டு உத்தரவுப் படி ராமேசுவரம் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்று கோவில் இணை ஆணையர் தெரிவித்தார்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் கோவிலில் தினமும் சாமிக்கு 6 கால பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். உச்சிகால பூஜை நடைபெறும்போது சாமிக்கு பொங்கல் படைக்கப்பட்டு நெய்வேத்திய பூஜைகள் செய்யப்படும். அதன்பின் அந்த பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படும். ஆனால் கடந்த 1 வாரமாக கோவிலில் சாமிக்கு உச்சிகால பூஜையின் பொங்கல் படைக்காமல் பூஜை செய்தததை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் செய்தனர்.

இந்நிலையில் கோவில் இணை ஆணையர் மங்கையர்க்கரசியின் உத்தரவின்பேரில் மடப்பள்ளியில் தற்காலிகமாக ஒரு பணியாளர் நியமிக்கப் பட்டு சாமிக்கு தேவையான பிரசாதங்கள் தரமாக தயார் செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை கோவில் இணை ஆணையர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.

இதுபற்றி கோவில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி கூறியதாவது:-

கோவிலில் உச்சி கால பூஜையின் போது சாமிக்கு நெய்வேத்திய பூஜைக்கு பொங்கல் படைக்காதது தொடர்பாக சம்பந்தப்பட்ட பேஷ்கார்களிடம் விளக்கம் கேட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்து ஆணையரின் உத்தரவுப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ராமேசுவரம் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மாவட்டம் முழுவதும் 600 ஏக்கர் உள்ளன. ஐகோர்ட்டு உத்தரவுப்படி ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் பல்வேறு பகுதிகளில் கோவிலுக்கு சொந்தமான அனைத்து நிலங்களையும், இடங்களையும் தீவிரமாக பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறோம்.

ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களையும் மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story