ராமேசுவரத்திற்கு கள்ளப்படகில் வந்த துருக்கியை சேர்ந்தவர் கைது


ராமேசுவரத்திற்கு கள்ளப்படகில் வந்த துருக்கியை சேர்ந்தவர் கைது
x
தினத்தந்தி 9 April 2018 3:30 AM IST (Updated: 9 April 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்திற்கு கள்ளப்படகில் வந்த துருக்கியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

ராமேசுவரம்,

துருக்கி நாட்டை சேர்ந்தவர் மகீர் தேவரிம். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து கள்ளப்படகில் ராமேசுவரத்துக்கு வந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த ராமேசுவரம் போலீசார் விரைந்து சென்று அவரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த 1989-ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை அங்குள்ள புரட்சிகர இயக்கத்தில் சேர்ந்து அரசுக்கு எதிராக செயல்பட்டதும், பின்னர் 1998-ம் ஆண்டு முதல் இந்தோனேசியா, அரபு நாடுகள், சீனா, ஸ்வீடன், பாகிஸ்தான் போன்ற பல்வேறு நாடுகளுக்கு சென்று வந்ததும் தெரியவந்தது.

அதனை தொடர்ந்து இலங்கை சென்ற அவர் யாழ்ப்பாணத்தில் தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில் இலங்கையை சேர்ந்த 2 பேரிடம் இந்தியா செல்ல வேண்டும் என்று கூறி ரூ.25,000 கொடுத்து பிளாஸ்டிக் படகு மூலம் கள்ளத்தனமாக ராமேசுவரம் வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. அவர் எதற்காக இந்தியா வந்தார் என்பது பற்றி உளவுத்துறையினரும், ராமேசுவரம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் தலைமையிலான போலீசாரும் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

இலங்கையில் இருந்து அவரை அழைத்து வந்தவர்கள் சேராங்கோட்டை கடற்கரை வரை வந்து சென்றுள்ளனர். இந்த பகுதியில் தான் இந்திய கடற்படை முகாம் அமைந்துள்ளது. கடற்படை முகாம் அமைந்துள்ள இடம் வரை அன்னிய நாட்டு படகு வந்து செல்லும் வரை கடற்படையினர் அலட்சியமாக இருந்துள்ள சம்பவம் இந்தியாவின் பாதுகாப்பை கேள்விக்குறியதாக்கி உள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

Related Tags :
Next Story