ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி சென்னையில் சுடுகாட்டில் குடியேறும் நூதன போராட்டம்: நாடார் மக்கள் சக்தி இயக்கத்தினர் கைது


ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி சென்னையில் சுடுகாட்டில் குடியேறும் நூதன போராட்டம்: நாடார் மக்கள் சக்தி இயக்கத்தினர் கைது
x
தினத்தந்தி 9 April 2018 4:15 AM IST (Updated: 9 April 2018 1:55 AM IST)
t-max-icont-min-icon

நாடார் மக்கள் சக்தி அமைப்பின் சார்பில் சென்னை தியாகராய நகர் கண்ணம்மாபேட்டை சுடுகாட்டுக்கு குடியேறும் நூதன போராட்டம் நேற்று நடந்தது.

சென்னை,

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நாடார் மக்கள் சக்தி அமைப்பின் சார்பில் சென்னை தியாகராய நகர் கண்ணம்மாபேட்டை சுடுகாட்டுக்கு குடியேறும் நூதன போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்துக்கு அமைப்பின் தலைவர் அ.ஹரிநாடார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜே.முத்துரமேஷ் நாடார், சென்னை நாடார் சங்க செயலாளர் டி.விஜயகுமார், தமிழ்நாடு நாடார் பேரவை அமைப்பாளர் புழல் தர்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டம் குறித்து ஹரிநாடார் நிருபர்களிடம் கூறுகையில், “மக்களை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லக்கூடிய ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூடவேண்டும். நச்சு மிகுந்த ஆலையை சுற்றி வாழ்வதை விட சுடுகாடு மேல் என்பதால் சுடுகாட்டில் குடியேறும் போராட்டம் நடத்துகிறோம். ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூடாவிட்டால் அடுத்தடுத்த போராட்டங்களை முன்னெடுப்போம்”, என்றார்.

போராட்டத்தில் தமிழ்நாடு நாடார் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் ராஜா, தலைமை நிலைய செயலாளர் கே.எஸ்.எம்.கார்த்திகேயன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

முன்னதாக ஸ்டெர்லைட் ஆலைக்கு பாடைகட்டி அதை கண்ணம்மாபேட்டை சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல போராட்டக்காரர்கள் முயற்சித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோரை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்தனர். மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். 

Next Story