வேலூர் மாவட்டத்தில் இருந்து 104 மாணவ - மாணவிகள் நீட்தேர்வு பயிற்சிக்கு சென்றனர்


வேலூர் மாவட்டத்தில் இருந்து 104 மாணவ - மாணவிகள் நீட்தேர்வு பயிற்சிக்கு சென்றனர்
x
தினத்தந்தி 9 April 2018 3:45 AM IST (Updated: 9 April 2018 2:31 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் இருந்து 104 மாணவ - மாணவிகள் நீட் தேர்வு சிறப்பு பயிற்சிக்காக நேற்று 2 பஸ்களில் சென்னை மற்றும் திருவள்ளூருக்கு அழைத்துசெல்லப்பட்டனர்.

வேலூர், 

மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு அரசு சார்பில் நீட் தேர்வுக்கான பயிற்சியளிக்கப்படுகிறது. சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் அவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வந்தது. வேலூர் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுத ஆயிரக்கணக்கான மாணவ - மாணவிகள் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டனர்.

வேலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 538 மாணவ - மாணவிகள் நீட் தேர்வு பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். 10-ம் வகுப்பில் அவர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 22 மையங்களில் தினமும் பயிற்சி வகுப்பு நடக்கிறது. அவர்களுக்கு மடிக்கணினி, நீட் தேர்வுக்கான சி.டி., மற்றும் புத்தகம் வழங்கப்படுகிறது.

மேலும் சிறந்த 100 பேர் தேர்வு செய்யப்பட்டு திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் ஆகிய இடங்களில் உணவு மற்றும் தங்கும் வசதியுடன் பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஆங்கில வழியில் படித்த 47 பேர், தமிழ் வழியில் படித்த 57 பேர் என 104 மாணவ - மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்களில் ஆங்கில வழி கல்வி பயின்ற 47 மாணவ - மாணவிகளுக்கு சென்னையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியிலும், தமிழ்வழியில் பயின்ற 57 மாணவ - மாணவிகளுக்கு திருவள்ளூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியிலும் சிறப்பு பயிற்சி வகுப்பு நடக்கிறது.

இதற்காக அவர்கள் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து 2 பஸ்களில் அழைத்து செல்லப்பட்டனர். முன்னதாக அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மடிக்கணினி, சி.டி., புத்தகம் ஆகியவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து ஆங்கில வழிகல்வி பயின்றவர்கள் சென்னைக்கும், தமிழ்வழி கல்வி பயின்றவர்கள் திருவள்ளூருக்கும் தனித்தனி பஸ்களில் புறப்பட்டு சென்றனர். அவர்களை வழியனுப்பிவைக்க பெற்றோரும் வந்திருந்தனர்.

மாணவ - மாணவிகளுக்கு அங்கு அடுத்த மாதம் (மே) 4-ந் தேதி வரை பயிற்சியளிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story