சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 9 April 2018 4:15 AM IST (Updated: 9 April 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சமயபுரம்,

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் பூச்சொரிதல் விழா, சித்திரை பெருந்தேரோட்டம் சிறப்பாக நடைபெறும். இக்கோவிலில் அம்மன் உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எந்தவிதமான நோய்களும், தீவினைகளும் அணுகாது சகல சவுபாக்கியங்களும் கிடைக்க ஆண்டுதோறும் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்வார்.

விரதம் பூரணமடைந்தவுடன் சிவபெருமானிடம் உள்ள சர்வ சக்தியையும் பெற்று படைத்தல், காத்தல், அழித்தல், மறைதல், அருள்பாலித்தல் ஆகிய ஐந்து தொழில்களையும் சித்திரை பெருவிழா நாட்களில் இங்கு அம்மன் புரிந்து வருவதாக மரபு. இத்தகைய சிறப்புகள் பெற்ற சித்திரை பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி காலை 7.30 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவிலின் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். 7.45 மணிக்கு துணியால் அம்மன் படம் வரையப்பட்ட கொடியினை கொடிமரத்தில் கோவில் குருக்கள் ஏற்றினர். தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டது.

இதில் கோவில் இணை ஆணையர் குமரதுரை, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் துரை.ராஜசேகர், மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ. பரமேஸ்வரி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு, அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். இரவு 7 மணிக்கு அம்மன் கேடயத்தில் புறப்பாடாகி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதைத்தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு பல்லக்கில் அம்மன் புறப்பாடாகி, ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றடைகிறார். மாலை 5 மணிக்கு அபிஷேகம் கண்டருளி இரவு 8 மணிக்கு சிம்ம வாகனத்தில் புறப்பாடாகி, வழிநடை உபயங்கள் கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார்.

நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 14-ந் தேதி வரை காலையில் பல்லக்கிலும், இரவு 8 மணிக்கு முறையே பூத வாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், சேஷ வாகனம் ஆகியவற்றில் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 15-ந் தேதி காலை பல்லக்கில் புறப்பாடாகிறார். இரவில் மரக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகி வழிநடை உபயங்கள் கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார்.

16-ந் தேதி காலை 10 மணிக்கு பல்லக்கில் அம்மன் புறப்பாடாகி வழிநடை உபயம் கண்டருளுகிறார். இரவில் வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் புறப்பாடாகி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து மூலஸ்தானம் சென்றடைகிறார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 17-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 10.31 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடிக்கப்படுகிறது. தொடர்ந்து தேரோட்டம் நடக்கிறது. பின்னர் இரவு 9 மணிக்கு அம்மன் தேரில் இருந்து புறப்பாடாகி மூலஸ்தானம் சென்றடைகிறார்.

18-ந் தேதி காலை பல்லக்கிலும், இரவு 8 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்திலும் அம்மன் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 19-ந் தேதி காலை பல்லக்கிலும், இரவு 8 மணிக்கு முத்து பல்லக்கிலும் அம்மன் புறப்பாடாகிறார். 20-ந் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது. அன்று மதியம் 12 மணிக்கு அம்மன் பல்லக்கில் புறப்பாடாகி, ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றடைகிறார். அங்கு மாலை 5 மணிக்கு அபிஷேகம் கண்டருளி, இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் வழிநடை உபயம் கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள், ஊழியர்கள் செய்துள்ளனர். 

Next Story