திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் கோடை வெயிலுக்கு இதமாக குளித்து மகிழ்ந்தனர்


திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் கோடை வெயிலுக்கு இதமாக குளித்து மகிழ்ந்தனர்
x
தினத்தந்தி 9 April 2018 4:00 AM IST (Updated: 9 April 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

திற்பரப்பு அருவியில் விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் கோடை வெயிலுக்கு இதமாக குளித்து மகிழ்ந்தனர்.

குலசேகரம்,

குமரி மாவட்டத்தில் வளர்ந்து வரும் சுற்றுலா தலங்களில் திற்பரப்பு அருவி முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் பாய்வதால், சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி பிற மாவட்டத்தில் இருந்தும், கேரள போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

வட மாநிலத்தில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் குமரி மாவட்டத்துக்கு சுற்றுலா வருபவர்கள் திற்பரப்புக்கு வர தொடங்கியுள்ளனர். இதனால், இங்கு ஆண்டு முழுவதும் சீசன் களைகட்டிய நிலையில் காணப்படுகிறது.

3–வது சிவாலயம்

இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து, நீச்சல் குளத்தில் நீச்சலடித்து மகிழ்ந்து, சிறுவர் பூங்காவில் விளையாடி, அருவியின் மேல்பகுதியில் உள்ள தடுப்பணையில் படகு சவாரி செய்து குதூகலத்துடன் வீடு திரும்புகிறார்கள். மேலும், அருவியின் அருகே மகாதேவர் கோவில் உள்ளது. இந்த கோவில் குமரி மாவட்டத்தில் நடைபெறும் வரலாற்று சிறப்பு மிக்க சிவாலய ஓட்டத்தில் 3–வது சிவாலயம் ஆகும். இதனால், இங்கு பக்தர்களின் வருகையும் அதிகரித்து வருகிறது.

கோடைக்கு இதமாக...

குலசேகரம், பேச்சிப்பாறை, திற்பரப்பு மற்றும் மலையோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. திற்பரப்பு அருவியில் தற்போது குளிர்ந்த காற்று அவ்வப்போது வீசுவதால் கோடைக்கு இதமாக காணப்படுகிறது.

விடுமுறை தினமான நேற்று திற்பரப்பு அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குறிப்பாக, குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பம்– குடும்பமாக ஏராளமானோர் வந்தனர். அவர்கள் கோடைக்கு இதமாக அருவியில் குளித்து, சிறுவர் பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர். படகுதளத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதையடுத்து நேற்று திற்பரப்பு அருவி சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால் ‘களை’ கட்டியது.


Next Story