விமான நிலைய பணி தாமதம் ஆவதற்கு மத்திய அரசே காரணம் விஜயகுமார் எம்.பி. பேட்டி


விமான நிலைய பணி தாமதம் ஆவதற்கு மத்திய அரசே காரணம் விஜயகுமார் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 9 April 2018 4:30 AM IST (Updated: 9 April 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

சாமிதோப்பு அருகே விமான நிலைய பணி தாமதம் ஆவதற்கு மத்திய அரசே காரணம் என்று விஜயகுமார் எம்.பி. கூறினார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட அ.தி. மு.க. செயலாளர் விஜயகுமார் எம்.பி. நாகர்கோவிலில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மணவாளக்குறிச்சியில் உள்ள அருமணல் ஆலை தற்போது செயல்படாமல் முடங்கி போய் உள்ளது. இதற்கு தமிழக அரசுதான் காரணம் என்றும், போக்குவரத்து நடைபெறுவதற்கான சான்றிதழை தமிழக அரசு வழங்கவில்லை என்றும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்துக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் விளக்கம் அளிப்பது கடமையாகும்.

அருமணல் ஆலைக்கான போக்குவரத்து சான்றிதழ் வழங்குதற்கு மத்திய அரசின் சுற்றுப்புற சூழல் அனுமதி வேண்டும். இந்த அனுமதிக்கான சான்றிதழ் கிடைக்காதது தான் இவ்வளவு காலதாமதத்துக்கும் காரணம்.

மணவாளக்குறிச்சி அருமணல் ஆலை செயல்படுவதற்கு, கடந்த 2011–ம் ஆண்டு சுற்றுப்புற சூழல் சான்று கோரி தமிழக அரசு மனு செய்தது. அதற்கான பதிலை, கடந்த 6–ந் தேதி தான் மத்திய அரசு அளித்துள்ளது. இந்த பதிலை தொடர்ந்து, தமிழக அரசு அருமணல் ஆலைக்கான போக்குவரத்து அனுமதியை கொடுக்கும். 2017–ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அருமணல் ஆலை பூட்டப்பட்டுக்கிடக்கிறது. இதற்கு முக்கிய காரணம் மத்திய அரசுதான். தற்போது, சுற்றுச்சுழல் அனுமதி வழங்கி இருக்கும் மத்திய அரசு, இதை முனைப்போடு முன்பே செய்திருந்தால் ஆலை மூடப்பட்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

கிட்டத்தட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், 262 நிரந்தர பணியாளர்களும் கடந்த 1¼ ஆண்டுகளாக வேலை இன்றி தவித்து வருகின்றனர். மத்திய அரசின் காலதாமதமே மணல் ஆலை முடங்கி போனதற்கான உண்மையான காரணம்.

குமரி மாவட்டத்தில் சாமிதோப்பு அருகே விமான நிலையம் அமைப்பதற்கான ஆயத்த பணிகளை தமிழக அரசு செய்துவிட்டது. அதற்கான தொகையையும் மத்திய அரசுக்கு செலுத்திவிட்டது. அதன்பிறகும் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக விமான நிலைய பணிகளை மத்திய அரசு இழுத்தடிப்பு செய்கிறது. பணிகள் தாமதம் ஆவதற்கு மத்திய அரசே காரணம்.

வர்த்தக துறைமுக விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளை தமிழக அரசு கவனித்து வருகிறது. மக்களின் மனநிலை ஆராய்ந்து அரசு அதிகாரிகள் கொடுக்கும் அறிக்கையினை பொறுத்து தமிழக அரசு பதில் நடவடிக்கை எடுக்கும்.

 அருமணல் ஆலை செயல்படுவதற்கான அனுமதியை தமிழக அரசு ஒருசில நாட்களில் வழங்கும். மாவட்டத்துக்கும், மாநிலத்துக்கும் நன்மை தரக்கூடிய திட்டங்களுக்கு தமிழக அரசு ஒருபோதும் தடையாக இருந்ததில்லை.

தமிழகத்தில் கழகங்கள் இல்லாத ஆட்சி அமைப்போம் என்று கூறுவது பா.ஜனதாவின் தனிப்பட்ட அரசியல்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது குமரி மாவட்ட மீன்வள கூட்டுறவு இணையத்தலைவர் சகாயம், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் கனகராஜ், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story