கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் சித்தராமையா மீண்டும் முதல்மந்திரி - ராகுல்காந்தி அறிவிப்பு


கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் சித்தராமையா மீண்டும் முதல்மந்திரி - ராகுல்காந்தி அறிவிப்பு
x
தினத்தந்தி 9 April 2018 5:00 AM IST (Updated: 9 April 2018 2:52 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரி ஆவார் என ராகுல்காந்தி அறிவித்தார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (மே) 12-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேப் போல் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகத்தில் தீவிர சுற்றுப்பயணம் செய்து தனது கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நிலையில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ராகுல் காந்தி நேற்று முன்தினம் கர்நாடகத்திற்கு வந்தார். முதல் நாளில் கோலார், சிக்பள்ளாப்பூர் ஆகிய மாவட்டங்களில் அவர் பயணம் மேற்கொண்டார். அங்கு நடந்த பொதுக்கூட்டங்களில் அவர் கலந்துகொண்டு பேசினார்.

2-வது நாள் சுற்றுப்பயணமான நேற்று அவர் பெங்களூருவில் காலை முதல் இரவு வரை கட்சியின் 5 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். முதல் நிகழ்ச்சியாக நேற்று காலை துப்புரவு தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி பெங்களூரு சேஷாத்திரிபுரத்தில் உள்ள ஜக்கராயனகெரேயில் நடைபெற்றது.

இதில் ராகுல் காந்தி, முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பு ஒரு நட்சத்திர ஓட்டலில் ராகுல் காந்தி சிற்றுண்டி சாப்பிட்ட படி பத்திரிகையாளர்களுடன் உரையாடினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகத்தில் எங்கள் (காங்கிரஸ்) ஆட்சிக்கு எதிரான அலை இல்லை. சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் தேர்தலை சந்திக்கிறது. சித்தராமையாவின் தலைமையை கர்நாடக மக்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், மக்கள் விரும்பும் மற்றும் மக்களிடையே உள்ள தலைவர் ஒருவர் தான் முதல்-மந்திரி ஆவார்(அப்போது பெயரை குறிப்பிடாமல் அவர் சித்த ராமையாவை நோக்கி கைகாட்டினார்).

சித்தராமையா 5 ஆண்டுகள் வெற்றிகரமான முறையில் ஆட்சியை நடத்தி இருக்கிறார். மீண்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றால் அவர் முதல்-மந்திரி ஆவது என்பது சகஜமானது. அத்துடன் எனக்கும், அவருக்கும் இடையேயான உறவு நன்றாக உள்ளது. நான் சொல்வதை அவர் கேட்கிறார். அவர் கூறும் ஆலோசனைகளை நானும் மதிக்கிறேன்.

கர்நாடகத்தில் பா.ஜனதா என்ன வியூகங்கள் வகுத்தாலும் அந்த கட்சி ஆட்சியை பிடிக்க முடியாது. சித்தராமையாவின் ஆட்சி நிர்வாகத்தை மக்கள் பாராட்டுகிறார்கள். மக்கள் முழு பெரும்பான்மையுடன் மீண்டும் ஒரு வாய்ப்பை காங்கிரசுக்கு வழங்குவார்கள். 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். மோடி, ஒரு திறமையற்ற தலைவர் என்பது சமீபத்தில் அவர் எடுத்த முடிவுகளில் இருந்து தெளிவாக தெரிகிறது.

குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது மோடி செய்த பணிகளுக்கும், அவர் பிரதமராக இப்போது செய்த பணிக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. மத்திய அரசின் தவறான ஆட்சி நிர்வாகத்தால் விவசாயிகள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் வெறுப்பில் உள்ள னர். தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்களும் கூட அதிருப்தியில் இருக்கிறார்கள். மோடி ஆட்சியில் யாரும் திருப்தி அடையவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் சில தவறுகளை செய்துவிட்டோம். அதனால் தோல்வி அடைய நேர்ந்துவிட்டது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் செய்யப்பட்ட நல்ல திட்டங்கள் குறித்து மக்களுக்கு சரியாக எடுத்துக் கூறவில்லை. பா.ஜனதாவினர் கிளப்பிய உணர்ச்சிப்பூர்வமான பிரச்சினைகளுக்கு நாங்கள் சரியான வியூகம் வகுக்கவில்லை.

யார் பொய் சொல்கிறார்கள் என்பதை மக்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளனர். முந்தைய காங்கிரஸ் ஆட்சி மற்றும் இப்போதைய பா.ஜனதா ஆட்சியை மக்கள் ஒப்பிட்டு பார்க்க தொடங்கியுள்ளனர். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு அணி அமைத்து செயல்பட்டால் அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைவது உறுதி. மாநில கட்சிகள் தங்களின் சொந்த வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும். அவ்வாறு ஒருங்கிணைந்து செயல்பட்டால் பா.ஜனதா மட்டுமின்றி வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியே தோல்வி அடைவார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் விருப்பப்படி பா.ஜனதா நடந்து கொள்கிறது. மத்திய அரசின் கொள்கைகளில் சங்பரிவார் கொள்கைகளை புகுத்துகிறார்கள்.

பிரதமர் மோடியும், பா.ஜனதா தலைவர் அமித்ஷாவும் தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுகிறார்கள். நான் அவ்வாறு எந்த தலைவரையும் தாக்கி பேசுவது இல்லை. கர்நாடக சட்டசபை தேர்தல் என்பது காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே நடைபெறும் கொள்கை யுத்தம். காங்கிரசில் பொறுப்புகள் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

நான் மடங்கள், கோவில்களுக்கு செல்வதை ஊடகங்கள் பெரிதாக எடுத்து பேசுகின்றன. நான் எப்போதும் கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்களுக்கு செல்கிறேன். ஆனால் இப்போது ஊடகங்கள் இதை பெரிதாக்குகின்றன. நாட்டில் காங்கிரஸ், பா.ஜனதாவை தவிர்த்து 3-வது அணி உருவாவது கடினம்.

மாநில கட்சிகள் ஒரு தலைவரை மையமாக கொண்டு செயல்படுகின்றன. அந்த கட்சிகள் கொள்கைகள் அடிப்படையில் செயல்படுவது இல்லை. அதனால் 3-வது அணி உருவாகாது. காங்கிரசுடன் மதசார்பற்ற கட்சிகள் ஒன்று சேர்ந்தால் அடுத்த ஆண்டு(2019) நடைபெறும் மக்களவை தேர்தலில் பா.ஜனதா 100 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது என ராகுல் காந்தி கூறினார்.

Next Story