அரசு பஸ் டிரைவரிடம் பணம் பறிக்க முயற்சி: சேலத்தில் போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது


அரசு பஸ் டிரைவரிடம் பணம் பறிக்க முயற்சி: சேலத்தில் போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது
x
தினத்தந்தி 9 April 2018 4:57 AM IST (Updated: 9 April 2018 4:57 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ் டிரைவரிடம் பணம் பறிக்க முயன்ற போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.

சேலம்,

சேலத்தில் அரசு பஸ் டிரைவரிடம் பணம் பறிக்க முயன்ற போலி சப்-இன்ஸ்பெக்டரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அவருடைய நண்பரை வலைவீசி தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). அரசு பஸ் டிரைவரான இவர், நேற்று முன்தினம் இரவு சேலம் புதிய பஸ்நிலையத்தில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்திற்கு சென்று தனது சம்பள பணத்தை எடுக்க சென்றார். அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த ஒருவர், அவருக்கு உதவி செய்வதாகக்கூறி ஏ.டி.எம். மையத்தில் இருந்து ரூ.23 ஆயிரத்தை எடுத்து கொடுத்தார்.

பின்னர், அவர் தான் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எனக்கூறி சரவணனிடம் இருந்து பணம் மற்றும் செல்போனை பறிக்க முயன்றதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை பார்த்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த சிலர், அங்கு சென்று இருவரையும் சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது, அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்ததால் அவரை பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அந்த நபர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே செம்பட்டியை சேர்ந்த ரவிசங்கர் (32) என்பது தெரியவந்தது. மேலும், அவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இல்லை என்பதும், தன்னை போலீஸ் அதிகாரி எனக்கூறி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், ரவிசங்கர் மற்றும் அவரது நண்பர் சென்னையை சேர்ந்த ஜார்ஜ் ஆகிய 2 பேரும் சேலத்தில் ஒரு ஓட்டலில் தங்கி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து தலைமறைவாக உள்ள ரவிசங்கரின் நண்பர் ஜார்ஜை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இவர்கள் இருவரும் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியுள்ளார்களா? என்று தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story