நண்பரை தாக்கியதை தட்டிக்கேட்டவருக்கு கத்திக்குத்து வாலிபர் கைது


நண்பரை தாக்கியதை தட்டிக்கேட்டவருக்கு கத்திக்குத்து வாலிபர் கைது
x
தினத்தந்தி 10 April 2018 3:30 AM IST (Updated: 9 April 2018 11:20 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே நண்பரை தாக்கியதை தட்டிக்கேட்டவரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வி.ஆர்.பி.சத்திரம் பகுதியை சேர்ந்தவர் இளவரசன்(வயது 27). நேற்று முன்தினம் இவர், அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான முத்துராமன்(28) என்பவருடன் திருவள்ளூரை அடுத்த திருமணிகுப்பம் பகுதியில் சாலை விபத்தில் இறந்த தங்கள் நண்பரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக சென்றார்.

அப்போது அங்கிருந்த சுங்குவார்சத்திரத்தை சேர்ந்த நாகராஜ்(29) என்பவர், ஏற்கனவே முத்துராமனுடன் இருந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு அவரை தகாத வார்த்தையால் பேசி தாக்கினார்.

இதை தடுத்த இளவரசன், தனது நண்பரை தாக்கியது குறித்து நாகராஜிடம் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நாகராஜ், இளவரசனையும் தாக்கியதுடன், தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் அவரை குத்தினார்.

இதில் காயமடைந்த இளவரசன், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூரை அடுத்த சொக்கநல்லூரை ச்ே-ாந்தவர் பிரதீப்ராஜ் என்ற விலாஸ்(22). இவர், சென்னை பாரிவாக்கத்தில் அழகு நிலையம் வைத்துள்ளார். மேலும் கோளப்பஞ்சேரியில் மற்றொரு அழகு நிலையமும் அவருக்கு உள்ளது. அங்கு அஜீத்குமார் மற்றும் பிரேம்குமார் ஆகியோர் வேலை செய்து வருகிறார்கள்.

ஆயில்சேரியை சேர்ந்த இரட்டைமலை, ஸ்டாலின், ஜெகன் உள்பட 5 பேரும் ஏற்கனவே தங்களுக்குள் இருந்துவரும் முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு கோளப்பஞ்சேரி அழகு நிலையத்தில் பணியாற்றி வரும் அஜீத்குமார், பிரேம்குமார் ஆகியோரை தாக்கி, அவர்கள் மூலமாக பிரதீப்ராஜை அங்கு வரவழைத்தனர்.

பின்னர் 5 பேரும் சேர்ந்து பிரதீப்ராஜ் உள்பட 3 பேரையும் உருட்டுக்கட்டையால் தாக்கியதுடன், கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்று விட்டனர். இதில் காயமடைந்த பிரதீப்ராஜ், அஜீத்குமார், பிரேம்குமார் 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுபற்றி வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள இரட்டைமலை உள்பட 5 பேரையும் தேடி வருகிறார்கள்.

Next Story