காரைக்குடி நகராட்சி பள்ளிக்கூடத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்டி தரவேண்டும், மாணவர்களின் பெற்றோர் கலெக்டரிடம் மனு


காரைக்குடி நகராட்சி பள்ளிக்கூடத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்டி தரவேண்டும், மாணவர்களின் பெற்றோர் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 10 April 2018 3:45 AM IST (Updated: 10 April 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் உள்ள ராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளிக்கூடத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்டி தரக்கோரி மாணவர்களின் பெற்றோர் கலெக்டரிடம் மனுகொடுத்தனர்.

சிவகங்கை,

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் லதா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, விபத்து நிவாரணம் கோருதல், பசுமை வீடு கேட்டல், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை கோருதல், பயிர் காப்பீட்டு தொகை வழங்க கேட்டல் உள்ளிட்ட 206 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர். அப்போது அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர் ஏற்கனவே கடந்த வாரத்தில் கொடுக்கப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களையும் அவர் கேட்டறிந்தார். மேலும் சமூகவலைதளம், வாட்ஸ்-அப், குறுஞ்செய்தி வாயிலாக பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் குறைகள் மீது விரைவில் தீர்வு காணப்பட்டு அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பயனாளிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 2 பெண்களுக்கு மாதாந்திர விதவை ஓய்வூதிய தொகைக்கான ஆணைகளையும், ஒரு திருநங்கைக்கு மாதாந்திர ஓய்வூதிய தொகைக்கான ஆணையினையும் கலெக்டர் வழங்கினார். இந்த கூட்டத்தில் வருவாய் அலுவலர் இளங்கோ, மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் விஜயன் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் சார்பில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

காரைக்குடியில் உள்ள ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி ஆகிய 2 பள்ளிக்கூடங்கள் ஒரே இடத்தில் செயல்பட்டு வருகின்றன. இந்த 2 பள்ளிக்கூடங்களிலும் சுமார் 1,500 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். ஆனால் இப்பள்ளியில் போதிய கட்டிட வசதி இல்லாமல் உள்ளது. இத்துடன் கழிப்பறை வசதி, இருக்கை வசதிகள் இல்லை. இதனால் மாணவ-மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே மாணவ-மாணவிகளின் நிலையை கருத்தில் கொண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட வேண்டும். மேலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, மாணவர்களுக்கு தேவையான இருக்கை வசதி மற்றும் கழிப்பறை வசதி செய்து தருவதுடன் பள்ளியில் உள்ள பழுதடைந்த மின் விளக்கு, மின் விசிறிகளை சரிசெய்து தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story