மாவட்டத்தில் 3 இடங்களில் ரெயில் மறியல்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 347 பேர் கைது


மாவட்டத்தில் 3 இடங்களில் ரெயில் மறியல்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 347 பேர் கைது
x
தினத்தந்தி 10 April 2018 4:00 AM IST (Updated: 10 April 2018 1:43 AM IST)
t-max-icont-min-icon

வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு எதிரான சுப்ரீம்கோர்ட்டு உத்தரவை ரத்து செய்யகோரி மாவட்டத்தில் 3 இடங்களில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் 347 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

விழுப்புரம்,

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள உத்தரவை கண்டித்தும், இந்த உத்தரவை உடனடியாக ரத்து செய்யகோரியும் நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் இருந்து மாநில பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். பின்னர் காலை 11.20 மணிக்கு ரெயில் நிலையத்திற்குள் சென்ற அவர்கள், அங்குள்ள 1-வது நடைமேடையில் வந்த சென்னை- திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் ஆகியோர் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிந்தனைச்செல்வன், கிழக்கு மாவட்ட செயலாளர் ஆற்றலரசு, மாநில செய்தி தொடர்பாளர் தமிழேந்தி, தொகுதி செயலாளர் தமிழ்மாறன், மாநில துணை செயலாளர்கள் சேரலாதன், நாராயணசாமி, மாவட்ட பொறுப்பாளர்கள் ஞானவேல், புஷ்பராஜ், நகர செயலாளர்கள் இரணியன், சரவணன் உள்ளிட்ட 132 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதேபோல் திண்டிவனம் ரெயில் நிலையத்திற்கு வந்த சென்னை- குருவாயூர் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் சேரன் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே திண்டிவனம் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 115 பேரை கைது செய்தனர்.

சின்னசேலம் ரெயில் நிலையத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் தனபால் தலைமையில் காரைக்கால்- பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆக மொத்தம் விழுப்புரம் மாவட்டத்தில் 3 இடங்களில் நடைபெற்ற ரெயில் மறியல் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 347 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். 

Next Story