முறைகேடாக உறுப்பினர்கள் நீக்கப்பட்டதாகக்கூறி திடீர் போராட்டம்: கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து


முறைகேடாக உறுப்பினர்கள் நீக்கப்பட்டதாகக்கூறி திடீர் போராட்டம்: கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து
x
தினத்தந்தி 10 April 2018 4:30 AM IST (Updated: 10 April 2018 1:46 AM IST)
t-max-icont-min-icon

கூட்டுறவு சங்க தேர்தல் வேட்பு மனு தாக்கலின்போது பெருவளம் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடாக உறுப்பினர்கள் நீக்கப்பட்டதாகக்கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அந்த கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு நான்கு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 2 கட்டங்களுக்கான தேர்தல் நடைபெற்றுள்ளது. 3-வது கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று நடைபெற்றது. நாகர்கோவில் பார்வதிபுரத்தை அடுத்த பெருவிளை பகுதியில் அமைந்துள்ள பெருவளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்திலும் நேற்று வேட்பு மனு பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

அப்போது கூட்டுறவு தேர்தல் வாக்காளர் பட்டியலில் இருந்து 1800-க்கும் மேற்பட்டோரின் பெயர்களை முறைகேடாக நீக்கியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது இந்த கூட்டுறவு சங்கத்தில் இயக்குனர்களாக இருந்தவர்கள், கடந்த கூட்டுறவு சங்க தேர்தலில் தற்போதுள்ள இயக்குனர்களை எதிர்த்து போட்டியிட்டவர்கள், இந்த தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய இருந்தவர்கள் ஆகியோர் பெயர்கள் முறைகேடாக, எவ்வித அறிவிப்புமின்றி நீக்கப்பட்டுள்ளதாக அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கூறி அந்த கூட்டுறவு சங்கத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

குறிப்பாக இந்த சங்கத்தின் இயக்குனர்களாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெயச்சந்திரன், அ.தி.மு.க.வை சேர்ந்த செல்வம், அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நவீன்குமார், த.மா.கா.வை சேர்ந்த சிவபிரபு உள்பட ஏராளமானோர் அந்த கூட்டுறவு சங்கத்தில் கூடி தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில் தேர்தல் அதிகாரி சுனில் குமார் என்பவரும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் அலுவலகத்துக்குள்ளேயே உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் முறைகேடாக நீக்கப்பட்டதை கண்டித்தும், தேர்தலை ரத்து செய்யக்கோரியும் கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு கோபி தலைமையில் இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி (நேசமணிநகர்), அன்பு பிரகாஷ் (கோட்டார்) மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதன்பிறகு கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் மாவட்ட கூட்டுறவு தேர்தல் பார்வையாளரும், மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளருமான நடுக்காட்டு ராஜா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அவர் கூட்டுறவு சங்க அலுவலகத்துக்குள் சென்று தேர்தல் அதிகாரியிடம் விவரங்களை கேட்டறிந்தார். அவரிடம் போராட்டக்காரர்கள் ஜெயச்சந்திரன் தலைமையில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நாங்கள் பெருவளம் கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறோம். இந்தநிலையில் எந்தவித காரணமும் இன்றி சுமார் 1800-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை முறைகேடாக நீக்கியுள்ளனர். இந்த சங்கத்தின் தலைவர் உள்ளிட்டோரும், அவர்களை சேர்ந்தவர்களும் மீண்டும் அந்த பதவியில் அமர வேண்டும் என்பதற்காக இப்படி செய்துள்ளனர். எனவே இத்தகைய முறைகேடுகளை களைந்திட, இந்த தேர்தலை ரத்து செய்து, மீண்டும் உறுப்பினர் சேர்க்கை மேற்கொண்டு, கூட்டுறவு தேர்தலை நடத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்து, அந்த கூட்டுறவு சங்கத்தின் வெளிப்புற சுவரில் தேர்தல் அதிகாரியின் அறிவிப்பு ஒட்டப்பட்டது. அதில் “இன்று (நேற்று) நடைபெற இருந்த வேட்பு மனு தாக்கலின்போது சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதாலும், தேர்தல் அலுவலர் தாக்கப்பட்டதாலும் தேர்தல் நடத்த உகந்த சூழ்நிலை இல்லாத நிலையில் தேர்தல் ரத்து செய்யப்படுகிறது“ என்று கூறப்பட்டு இருந்தது.

அதன்பிறகு போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 2 மணி நேரத்துக்கும் மேலாக இந்த போராட்டம் நடந்ததால், அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. 

Next Story