ஆம்லெட்டில் உப்பு இல்லாததால் தகராறு: மதுக்கடை பார் மீது வெடிகுண்டுகள் வீசிய 2 பேர் கைது


ஆம்லெட்டில் உப்பு இல்லாததால் தகராறு: மதுக்கடை பார் மீது வெடிகுண்டுகள் வீசிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 April 2018 4:00 AM IST (Updated: 10 April 2018 1:46 AM IST)
t-max-icont-min-icon

திருபுவனை அருகே ஆம்லெட்டில் உப்பு இல்லாததால் தகராறு செய்து மதுக்கடை பார் மீது வெடிகுண்டுகள் வீசிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை மடக்கிப்பிடித்த போது போலீசாரையே அவர்கள் மிரட்டினர்.

திருபுவனை,

திருபுவனை அருகே ஆண்டியார்பாளையத்தில் பார் வசதியுடன் கூடிய தனியார் மதுக்கடை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மது குடிக்க வந்த 2 வாலிபர்கள் குடிபோதையில் ஆம்லெட் கேட்டனர். அப்போது அவர்களுக்கு கொடுத்த ஆம்லெட்டில் உப்பு இல்லை என்பதால் சமையல் மாஸ்டருடன் அவர்கள் தகராறில் ஈடுபட்டனர்.

இதை அங்கிருந்த பார் ஊழியர்கள் கண்டித்தனர். பின்னர் அவர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி சென்று விட்டனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து ஆத்திரத்தில் இருந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் அன்று மாலையே மீண்டும் ஆண்டியார்பாளையத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்த அவர்கள் பார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில் 2 வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. ஒரு குண்டு வெடிக்காமல் கீழே விழுந்தது. இந்த வெடிகுண்டை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் அவர்கள் தப்பிச் சென்றனர். வெடிகுண்டுகள் வெடித்ததில் பார் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பாரில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து வெடிகுண்டு வீசியவர்கள் பற்றி விசாரித்தனர்.

இதில் வெடிகுண்டுகளை வீசியவர்கள் விழுப்புரம் அருகே கோலியனூரை சேர்ந்த தீனா என்கிற தினகராஜ் (வயது 27), எல்.ஆர்.பாளையத்தை சேர்ந்த சுகு மாறன் (22) என்பதும் இவர்கள் கோலியனூர் பகுதியில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தலைமையில் போலீசார் கோலியனூருக்கு விரைந்து சென்றனர். அங்கு மூங்கில் தோப்பில் பதுங்கி இருந்த அவர்களை சுற்றிவளைத்தனர். அப்போது அவர்கள், தங்களை பிடிக்க முயன்றால் கத்தியால் குத்திவிடுவதாக போலீசை மிரட்டினார்கள். எனினும் போலீசார், அவர்கள் 2 பேரையும் லாவகமாக மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசாருக்கு அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக தினகராஜ் இரவோடு இரவாக மொட்டை அடித்து இருந்தார். ஆனாலும் போலீசார் அவரை அடையாளம் கண்டுபிடித்தனர்.

பிடிபட்ட அவர்கள் இருவரையும் திருபுவனை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் கொண்டு வந்தனர். நாட்டு வெடிகுண்டுகளை அவர்களே தயாரித்தார்களா? அல்லது யாரிடமாவது வாங்கி வந்தார்களா? என்பது குறித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் தாங்களாகவே வெடிகுண்டுகளை தயாரித்ததாக ஒப்புக்கொண்டனர். மதுக்கடை பார் மீது வீசியதில் வெடிக்காத வெடிகுண்டு எங்கே? என்று கேட்டு போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரித்து வருகிறார்கள்.

இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த திருபுவனை போலீசாரை, டி.ஐ.ஜி. ராஜீவ் ரஞ்சன், போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் ஆகியோர் பாராட்டினார்கள். 

Next Story