2 கோவில்களின் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


2 கோவில்களின் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 10 April 2018 4:30 AM IST (Updated: 10 April 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை அருகே 2 கோவில்களின் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்த சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சின்ன மணப்பட்டியில் முனியப்பன் கோவில் உள்ளது. திறந்த வெளியில் உள்ள இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த கோவிலின் முன்பு பக்தர்கள் காணிக்கை செலுத்த உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை அந்த பகுதி மக்கள் கோவிலுக்கு சென்றபோது கோவிலில் இருந்த உண்டியல் மற்றும் வேல் ஆகியவை மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கிராம மக்களுக்கு தெரிய வரவே, அவர்கள் கோவிலுக்கு விரைந்து வந்து உண்டியல் மற்றும் வேலை தேடினர்.

அப்போது கோவிலின் பின்பகுதியில் சிறிது தூரத்தில் உண்டியல் உடைக்கப்பட்டும், அதன் அருகே வேலும் கிடந்தன. உண்டியலில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதை அறிந்த கிராம மக்கள் இதுபற்றி மணப்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதேபோல் மணப்பட்டியில் உள்ள விநாயகர் கோவிலின் பூட்டை உடைத்து அங்கிருந்த உண்டியலையும் மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த பணத்தையும் கொள்ளையடித்து விட்டு முட்புதரில் வீசிச் சென்றுள்ளனர். இதுதொடர்பாகவும் மணப்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உண்டியல்களில் எவ்வளவு பணம் இருந்தது என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை.

2 கோவில்களின் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மணப்பாறை பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story