கட்டணம், ஆவணம் இன்றி வழக்குகளுக்கு தீர்வு காணும் சமரச மையம் திருச்சி கோர்ட்டில் தொடங்கப்பட்டது


கட்டணம், ஆவணம் இன்றி வழக்குகளுக்கு தீர்வு காணும் சமரச மையம் திருச்சி கோர்ட்டில் தொடங்கப்பட்டது
x
தினத்தந்தி 10 April 2018 4:15 AM IST (Updated: 10 April 2018 2:34 AM IST)
t-max-icont-min-icon

கட்டணம், ஆவணம் இன்றி வழக்குகளுக்கு தீர்வு காணும் சமரச தீர்வு மையம் திருச்சி கோர்ட்டில் தொடங்கி வைக்கப்பட்டது.

திருச்சி,

நீண்ட காலம் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச அடிப்படையில் தீர்வு காணும் முறை தொடங்கப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில் சமரச மைய தீர்வு நாள் நேற்று திருச்சி கோர்ட்டில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சட்டப்பணிகள் ஆணைய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சமரச தீர்வு மையத்தின் தொடக்க விழா நேற்று காலை நடைபெற்றது. இந்த மையத்தினை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி எஸ்.குமரகுரு தொடங்கி வைத்து பேசினார்.

கட்டணம் கிடையாது

அவர் பேசுகையில் ‘இந்த சமரச தீர்வு மையமானது வருகிற 13-ந்தேதி வரை செயல் படும். இங்கு வழக்குகளை விசாரிப்பதற்காக இதற்கென தனியாக பயிற்சி அளிக்கப்பட்ட வக்கீல்கள் மத்தியஸ்தர்களாக செயல்படுவார்கள். அவர்களிடம் நிலுவையில் உள்ள வழக்குகளை எடுத்து கூற வேண்டும். இந்த மையத்தில் விசாரிக்கப்படும் வழக்குகளுக்கு கோர்ட்டு கட்டணம் கிடையாது. ஆவணங்கள் தேவை இல்லை. நியாயத்தின் அடிப்படையில் வழக்கு முடித்து வைக்கப்படுவதால் யாருக்கும் வெற்றி, தோல்வியும் கிடையாது. எனவே பொதுமக்கள் இந்த மையத்தை அணுகி பயன் அடையலாம்’ என்றார்.

இதில் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், மாவட்ட வருவாய் அதிகாரி பஷீர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக், நீதிபதிகள் சுப்பிரமணியன், குருமூர்த்தி, பாலசுப்பிரமணியன், கீதா, வக்கீல் சங்க தலைவர் பன்னீர்செல்வன், செயலாளர் ஜெயசீலன், குற்றவியல் வக்கீல் சங்க தலைவர் ராஜேந்திர குமார் உள்பட மூத்த வக்கீல்கள் பலரும் கலந்து கொண்டு பேசினர். 

Next Story