ஓட்டேரியில் செல்போன் கோபுரத்தில் கேபிள் திருட்டு முன்னாள் ஊழியர் கைது
ஓட்டேரியில் செல்போன் கோபுரத்தில் ஏறி அதில் இருந்த கேபிளை திருடியதாக தனியார் செல்போன் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
திரு.வி.க. நகர்,
சென்னை ஓட்டேரி பகுதியில் தனியார் செல்போன் நிறுவனத்தின் சேவை திடீரென பாதிக்கப்பட்டது. இதுகுறித்து வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு புகார் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த நிறுவனத்தின் சார்பில் அப்பகுதியில் உள்ள செல்போன் கோபுரங்களை சோதனை செய்யுமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதன்பேரில் ஓட்டேரி ஆதிசேசன் நகரில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் அமைக்கப்பட்டு இருந்த செல்போன் கோபுரத்தை சோதனை செய்தபோது, அதில் உள்ள கேபிள் அறுத்து திருடப்பட்டு இருந்தது. இதனால் செல்போன் சேவை பாதிப்புக்கு உள்ளானது தெரியவந்தது.
இதுகுறித்து செல்போன் நிறுவனம் சார்பில் நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ஊழியர் சங்கர் ஓட்டேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வானமாமலை சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.
முன்னாள் ஊழியர் கைது
அப்போது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஒருவர் மொட்டை மாடிக்கு சென்று செல்போன் கோபுரத்தில் ஏறி கேபிளை அறுத்துச்சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.
விசாரணையில் கேபிளை திருடியவர் வியாசர்பாடி அடுத்த சர்மாநகர் காந்திஜி தெருவை சேர்ந்த ரங்கநாதன் (வயது 29) என்பதும், இவர் ஏற்கனவே இந்த தனியார் செல்போன் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. தற்போது அவர் வேறு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
போலீசார் ரங்கநாதன் வீட்டில் இருந்த ரூ.14,500 மதிப்புள்ள கேபிளை பறிமுதல் செய்து ரங்கநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர். ரங்கநாதன் கடந்த ஆண்டு(2017) தமிழ்நாட்டிற்கான சிறந்த ஆணழகன் போட்டியில் முதல் பரிசு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story