செல்போன் திருடிய பெண்ணை துரத்தி பிடித்த பெண் போலீஸ்


செல்போன் திருடிய பெண்ணை துரத்தி பிடித்த பெண் போலீஸ்
x
தினத்தந்தி 10 April 2018 4:20 AM IST (Updated: 10 April 2018 4:20 AM IST)
t-max-icont-min-icon

ரெயில் பயணிகளிடம் செல்போன் திருடி வந்த பெண்ணை, பெண் போலீஸ் ஒருவர் துரத்தி பிடித்தார். அவரிடம் இருந்து 5 திருட்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மும்பை கோவண்டி போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாக பணியாற்றி வருபவர் ஜெயஸ்ரீ. இவர் சம்பவத்தன்று பணி முடிந்து வாஷி சென்ற மின்சார ரெயிலில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ரெயிலில் ஜெயஸ்ரீ நின்ற பெட்டியில் பெண் ஒருவர் சகபயணியின் பையில் கையைவிட்டு செல்போனை திருட முயன்றார். இதை கவனித்த ஜெயஸ்ரீ அந்த பெண்ணை பிடித்தார்.

இந்தநிலையில் ரெயில் வாஷி வந்து நின்றது. அப்போது செல்போன் திருடமுயன்ற பெண், ஜெயஸ்ரீயின் கையை தட்டிவிட்டு தப்பி ஓடினார்.

பெண் போலீஸ் ஜெயஸ்ரீ பிளாட்பார முனை வரை துரத்திச்சென்று அவரை மடக்கிப்பிடித்தார். இதன்பின்னர் அவர் அந்த பெண்ணை வாஷி ரெயில்வே போலீசில் ஒப்படைத்தார். ரெயில்வே போலீசார் அந்த பெண்ணிடம் இருந்து 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில், பிடிபட்ட பெண் அன்று ஒரே நாளில் 5 பயணிகளிடம் இருந்து செல்போனை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து வாஷி ரெயில்வே போலீசார் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story