வங்கதேசத்தில் மர்மமான முறையில் இறந்த அவினாசி பெண் குறித்து பெற்றோரிடம் தூதரக அதிகாரிகள் விசாரணை


வங்கதேசத்தில் மர்மமான முறையில் இறந்த அவினாசி பெண் குறித்து பெற்றோரிடம் தூதரக அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 10 April 2018 4:58 AM IST (Updated: 10 April 2018 4:58 AM IST)
t-max-icont-min-icon

வங்கதேசத்தில் மர்மமான முறையில் இறந்த அவினாசி பெண் குறித்து அவரது பெற்றோரிடம் தூதரக அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

அவினாசி,

திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த முருகானந்தம்-செல்வ கோமதி தம்பதியின் மகள் பூரணாதேவி (வயது 19). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு அங்கு வேலை பார்த்து வந்த ரிமுஷேக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு வங்கதேசத்துக்கு சென்று விட்டார்.

இதற்கிடையில் கடந்த பிப்ரவரி மாதம் 9-ந்தேதி பூரணாதேவி இறந்து விட்டதாக அவரது பெற்றோருக்கு போன் மூலம் தகவல் கிடைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தங்கள் மகள் சாவில் மர்மம் உள்ளதாகவும் விசாரித்து நீதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். அத்துடன் பூரணாதேவியின் சடலத்தை வேலாயுதம்பாளையத்துக்கு கொண்டுவர வேண்டும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மத்திய மந்திரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக அவினாசி போலீசார் மேற்குவங்காளம் சென்று விசாரணை நடத்தினர். அப்போது ரிமுஷேக் வங்க தேசத்தை சேர்ந்தவர் என்பதும், போலி ஆவணங்கள் மூலம் திருப்பூரில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. இது தொடர்பான அறிக்கையை போலீசார் மாநில அரசிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் வங்க தேசத்தில் உள்ள இந்த துணை தூதரக அதிகாரி அஜய்குமார் சிங், பூரணாதேவி குடும்பத்தினரிடம் போனில் விசாரணை நடத்தினர். அப்போது ரிமுஷேக் தொடர்பான விவரங்கள் மற்றும் சம்பவம் குறித்தும் கேட்டதாக பூரணாதேவியின் பெற்றோர் தெரிவித்தனர்.

இது தொடர்பாக முருகானந்தனிடம் கேட்டபோது, வங்க தேசத்தில் இருந்து எனக்கு போன் வந்தது. அதில் பேசியவர் தான் தூதரக அதிகாரி ஏ.கே.மிஸ்ரா என்று கூறியதுடன், ரிமுஷேக்கின் முகவரி பற்றி கேட்டனர். ஆனால் எனக்கு ரிமுஷேக்கின் முகவரி தெரியாது என்றேன். பின்னர் ரிமுஷேக்கின் போன் நம்பர் கேட்டனர். இதனால் ரிமுஷேக்கின் போன் நம்பர் மற்றும் அவரது குடும்பத்தினர் என்னிடம் பேசிய போன் நம்பர் ஆகியவற்றை அவரிடம் தெரிவித்தேன் என்றார்.


Next Story