ஆலங்குப்பத்தில் ரெயில் மறியல் போராட்டம்


ஆலங்குப்பத்தில் ரெயில் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 11 April 2018 4:46 AM IST (Updated: 11 April 2018 4:46 AM IST)
t-max-icont-min-icon

வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு எதிரான உத்தரவை ரத்து செய்யக்கோரி ஆலங்குப்பத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரசூர்,

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள உத்தரவை கண்டித்தும், இந்த உத்தரவை உடனே ரத்து செய்யக்கோரியும் நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆலங்குப்பம் ரெயில் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் இளவரசு, காசிநாதன், நகர செயலாளர் மனோகரன் உள்ளிட்டவர்கள் திரண்டு வந்தனர்.

காலை 11.15 மணியளவில் ஆலங்குப்பம் ரெயில் நிலையத்திற்கு வந்த மதுரை-விழுப்புரம் செல்லும் பயணிகள் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு எதிரான உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று ரெயில் மறியலில் ஈடுபட்ட 100 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று அரசூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.அதன் பிறகு அந்த ரெயில் 11.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். 

Next Story