கிராம பஞ்சாயத்து ஊழியர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி


கிராம பஞ்சாயத்து ஊழியர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி
x
தினத்தந்தி 11 April 2018 4:46 AM IST (Updated: 11 April 2018 4:46 AM IST)
t-max-icont-min-icon

குறைந்தபட்ச ஊதியம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற கிராம பஞ்சாயத்து ஊழியர் சங்கத்தினர் 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்,

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு ஊழியர்களுக்கு அர சாணைப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்கக்கோரி நேற்று முன்தினம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே கிராம பஞ்சாயத்து ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினார்கள்.

இவர்களது போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. போராட்டம் நடத்துவதற்காக கிராம பஞ்சாயத்து ஊழியர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். ஆனால் போராட்டம் நடத்த போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து அவர்கள் அனைவரும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தை முற்றுகையிட முயன்றனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், இன்ஸ்பெக்டர்கள் ராஜன், காமராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் மருது, ஆனந்தன் மற்றும் போலீசார் விரைந்து சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

இருப்பினும் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற 4 பெண்கள் உள்பட 120 பேரை போலீசார் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 

Next Story