பிரசாரத்தை அதிகாரிகள் தடுப்பதாக தேர்தல் ஆணைய அலுவலகத்தில் பா.ஜனதா புகார்


பிரசாரத்தை அதிகாரிகள் தடுப்பதாக தேர்தல் ஆணைய அலுவலகத்தில் பா.ஜனதா புகார்
x
தினத்தந்தி 11 April 2018 5:45 AM IST (Updated: 11 April 2018 5:15 AM IST)
t-max-icont-min-icon

பிரசாரத்தை அதிகாரிகள் தடுப்பதாக தேர்தல் ஆணைய அலுவலகத்தில் பா.ஜனதா புகார் செய்தது.

பெங்களூரு,

பிரசாரத்தை அதிகாரிகள் தடுப்பதாக தேர்தல் ஆணைய அலுவலகத்தில் பா.ஜனதா புகார் செய்தது.

நடவடிக்கை எடுப்பதாக...

தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமாரை பா.ஜனதாவை சேர்ந்த மத்திய மந்திரிகள் அனந்தகுமார், பிரகாஷ் ஜவடேகர், மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ், முன்னாள் துணை முதல்-மந்திரி ஆர்.அசோக் ஆகியோர் நேற்று சந்தித்து புகார் மனு கொடுத்தனர். பா.ஜனதா நிர்வாகிகள் நடத்தும் பிரசாரத்தை அதிகாரிகள் தடுப்பதாக கூறினர். இந்த சந்திப்புக்கு பின் ஆர்.அசோக் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்து கோவில்களில் இருக்கும் கொடியை அதிகாரிகள் அகற்றுகிறார்கள். ஆன்மிக தலங்களில் ஏற்றப்பட்டு இருக்கும் கொடிகளை அகற்ற முடியாது. இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்து இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி உறுதி அளித்துள்ளார். குடகு, தட்சிண கன்னடா, பெங்களூரு, சிக்கமகளூரு உள்ளிட்ட மாவட்டங்களில் பா.ஜனதா நிர்வாகிகளை போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிகளின் எல்லையை விட்டு வெளியேற்றுகிறார்கள் என்று கூறினோம். இதுபற்றி ஆலோசிப்பதாக கூறினார்.

பிரசாரத்தை தடுக்கிறார்கள்

வீடுகளின் சுவர்களில் எழுதப்பட்டுள்ள பா.ஜனதா பிரசார வாசகங்கள், கொடி, சின்னத்தை அதிகாரிகள் அழிப்பதாக புகார் தெரிவித்தோம். விவசாயிகளின் வீடுகளில் உணவு தானியங்களை சேகரித்து வைத்துள்ளோம். அதை சமைத்து மக்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளோம். இதற்கு அதிகாரிகள் எந்த குறுக்கீடும் செய்யாமல் இருக்க தேவையான அறிவுரையை வழங்குமாறு கூறினோம்.

காங்கிரஸ் அரசு பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறி ஓட்டுகளை கவர தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. தனக்கு தேவையான அதிகாரிகளை முக்கிய இடங்களில் நியமித்து இருக்கிறது. இதன் மூலம் தேர்தலில் ஆதாயம் அடைய காங்கிரஸ் முயற்சி செய்கிறது. இத்தகைய அதிகாரிகள் தான் பா.ஜனதாவின் தேர்தல் பிரசாரத்தை தடுக்கிறார்கள். இதன் மூலம் பா.ஜனதா நிர்வாகிகளுக்கு தொல்லை கொடுக்கிறார்கள்.

தொல்லை கொடுத்தனர்

ஒசப்பேட்டேயில் எடியூரப்பா பயணம் செய்த ஹெலிகாப்டர் தரையிறங்க அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். ஹெலிகாப்டர் தரையிறங்க முதலே அனுமதி பெறப்பட்டு இருந்தது. ஆயினும் அதிகாரிகள் தேவை இல்லாமல் தொல்லை கொடுத்தனர். இவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி உறுதி அளித்துள்ளார். எந்த புகார் இருந்தாலும் அதை ‘சமாதான்‘ என்ற இணையதள பக்கத்தில் தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.

Next Story