திருக்கனூரில் சசிகலா, டி.டி.வி.தினகரன் பேனர் கிழிப்பு


திருக்கனூரில் சசிகலா, டி.டி.வி.தினகரன் பேனர் கிழிப்பு
x
தினத்தந்தி 11 April 2018 5:52 AM IST (Updated: 11 April 2018 5:52 AM IST)
t-max-icont-min-icon

திருக்கனூரில் சசிகலா, டி.டி.வி. தினகரன் பேனர் கிழிக்கப்பட்டது. இதை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருக்கனூர்,

கோடை காலத்தை முன்னிட்டு திருக்கனூர் கடை வீதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சுத்துக்கேணி பாஸ்கர் தலைமையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதையொட்டி ஜெயலலிதா, சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரது படங்களுடன் பேனர்கள் வைக்கப்பட்டன.

நேற்று முன்தினம் இரவு அந்த பேனர்களை யாரோ சிலர் கிழித்து சேதப்படுத்திவிட்டு சென்றதாக தெரிகிறது. இதை நேற்று காலை பார்த்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பேனர்களை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி திருக்கனூர் கடை வீதியில் அமர்ந்து திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேனர் சேதப்படுத்தப்பட்ட பகுதி கண்டமங்கலம் என்பதால், அதுபற்றி சம்பந்தப்பட்ட போலீசில் புகார் தெரிவிக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

இதனை ஏற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலைமறியல் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story