ராமேசுவரம் கோவிலில் 30 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டுபோன சாமி சிலையை கண்டுபிடிக்க கோரிக்கை


ராமேசுவரம் கோவிலில் 30 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டுபோன சாமி சிலையை கண்டுபிடிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 11 April 2018 6:01 AM IST (Updated: 11 April 2018 6:01 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் கோவிலில் 30 ஆண்டுகளுக்கு முன்பு திருடு போன சாமி சிலையை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கண்டுபிடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

ராமேசுவரம்,

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் கோவிலில் ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் என ஐம்பொன்னால் ஆன பல சிலைகள் உள்ளன. இந்தநிலையில் இங்கு சுமார் 2 அடி உயரம் கொண்ட ஐம்பொன்னால் ஆன லட்சுமணர் சிலை ஒன்று கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருடு போனது. இதுகுறித்து திருக்கோவில் அதிகாரிகள் சார்பில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் பட்டது. ஆனால் திருடு போன சாமி சிலையை கண்டுபிடிக்க முடியவில்லை என காவல்துறையால் திருக்கோவில் நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டதாம்.

இந்தநிலையில் சில மாதங்களுக்கு முன்பு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், ராமேசுவரம் கோவிலில் காணாமல் போன சிலை குறித்தும், தற்போது எத்தனை சிலைகள் உள்ளன என்பது குறித்தும் நேரில் வந்து கோவில் அதிகாரிகளிடம் தகவல்களை கேட்டறிந்தார். 30 ஆண்டுகளுக்கு முன்பு திருடு போன சாமி சிலை இதுவரை கண்டு பிடிக்கப்படாமல் இருப்பது, அனைத்து தரப்பு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி கூறியதாவது:- ராமேசுவரம் கோவிலில் லட்சுமணர் சாமி சிலை திருடு போய் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால் இது வரை சிலையை திருடியது யார்? எங்கு கடத்தி செல்லப்பட்டது என்ற தகவல் இல்லை. இந்து அறநிலையத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளது.

எனவே சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கோவிலுக்கு வந்து தீவிர விசாரணை நடத்த வேண்டும். திருடு போன சிலையை கண்டுபிடிக்க கோரி இந்து முன்னணி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Next Story