நியூட்ரினோ ஆய்வு மையம் அமைந்தால் தேனி, இடுக்கி மாவட்டங்களின் நில அமைப்பு மாறிவிடும், கேரள விஞ்ஞானி பத்மநாபன் தகவல்


நியூட்ரினோ ஆய்வு மையம் அமைந்தால் தேனி, இடுக்கி மாவட்டங்களின் நில அமைப்பு மாறிவிடும், கேரள விஞ்ஞானி பத்மநாபன் தகவல்
x
தினத்தந்தி 11 April 2018 6:30 AM IST (Updated: 11 April 2018 6:12 AM IST)
t-max-icont-min-icon

நியூட்ரினோ ஆய்வு மையம் அமைந்தால் தேனி, இடுக்கி மாவட்டங்களின் நில அமைப்பு மாறிவிடும் என கேரள மாநிலத்தை சேர்ந்த விஞ்ஞானி பத்மநாபன் பேசினார்.

தேனி,

தேனி மாவட்டம் போடி அருகே அம்பரப்பர் மலைப்பகுதியில் அமைய உள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நடைபயணம் மேற்கொண்டார். இந்த நடைபயணத்தின் நிறைவு பொதுக்கூட்டம், தேனி மாவட்டம் கம்பத்தில் நேற்று இரவு நடந்தது.

இதில் உலகளாவிய விஞ்ஞானிகள் அமைப்பின் உறுப்பினரும், கேரள மாநிலம் கொச்சி பகுதியை சேர்ந்த விஞ்ஞானியுமான பத்மநாபன் கலந்துகொண்டு பேசியதாவது:-

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வைகோவின் பேச்சை மத்திய, மாநில அரசு அப்போதே கேட்டு இருந்தால், இப்போது மக்கள் இந்த அளவுக்கு போராடும் நிலைமை ஏற்பட்டு இருக்காது. நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு, 2 லட்சம் டன்னுக்கும் அதிகமான பாறைகள் வெடிவைத்து தகர்க்கப் போகிறார்கள்.

இதன்மூலம் இடுக்கி, தேனி மாவட்டத்தில் நீர்வளம், நிலவளம் பாதிக்கப்படும். இப்பகுதிகளில் உள்ள அணைகளுக்கு ஆபத்து ஏற்படும். இந்த ஆய்வுக்கூடத்தில் அணுக்கழிவுகளை சேமித்து வைக்க உள்ளனர். இந்த ஆய்வுக்கூடம் அமைப்பதற்காக ஆயிரக் கணக்கான டன் வெடிமருந்து பயன்படுத்த உள்ளனர். இதனால் அந்தப் பகுதி மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

கடந்த 2011-ம் ஆண்டில் கலெக்டர் தலைமையில் ஒரு கூட்டம் பொட்டிப்புரத்தில் நடத்தப்பட்டது. அப்போது அந்த பகுதியின் விவசாயம், நீர், காற்று எதற்கும் பாதிப்பு ஏற்படாது என்று கூறினர். உலகில் இதுபோன்ற ஆய்வுக்கூடங்களில் என்ன நடந்தது என்பதை நான் ஆய்வு செய்தேன்.

இதில் இத்தாலியில் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்ட ஒரு ஆண்டில் ஆபத்து ஏற்பட்டு 14 பேர் இறந்தனர். 3 ஆண்டுகள் ஆய்வை நிறுத்தி வைத்துள்ளனர். பொட்டிப்புரத்தில் ஆய்வுக்கூடம் அமைப்பதாலும், இதற்காக ஜெலட்டின் குச்சிகள் வைத்து வெடிக்கும் போதும் தமிழகத்தில் உள்ள 6 அணைகளும், கேரளாவில் உள்ள 12 அணைகளும் என மொத்தம் 18 அணைகள் உடைகின்ற ஆபத்து ஏற்படும்.

இத்தாலியில் நியூட்ரினோ ஆய்வு மையத்தில் இருந்து கசியும் தண்ணீரில், 60 வேதிப்பொருட்கள் கலந்து வருவதால் அதை மக்கள் பயன்படுத்த முடியவில்லை. இதேபோல் பொட்டிப்புரத்தில் ஆய்வகம் அமைக்கும் போது, முல்லைப்பெரியாறு நீரில் ரசாயனம் கலந்தால் இந்த தண்ணீரை மக்கள் பயன்படுத்த முடியாது. இது இந்திய அரசுக்கும் தெரியும்.

கல்பாக்கம், கூடங்குளம் அணுக்கழிவுகளை அங்கேயே வைத்துக் கொள்ள முடியாது. அதை, ஆழமான பகுதியில் புதைத்து வைக்க வேண்டும். தேனி மாவட்டமும், கேரள மாநிலமும் நிலநடுக்கம் ஏற்படும் இடங்கள் குறித்த பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. இங்கு எப்போது வேண்டுமானாலும் நிலநடுக்கம் ஏற்படலாம்.

நியூட்ரினோ ஆய்வு மையத்தை மக்கள் வசிக்காத இடங்களில், வறண்ட பகுதிகளில் தான் அமைக்க வேண்டும். ஆனால், தேனி, இடுக்கி மாவட்ட பகுதிகள் மக்கள் அதிகம் வசிக்கும் இடங்கள் ஆகும். வளங்கள் நிறைந்த பகுதிகள். அணைகள் அமைந்துள்ளதால் இப்பகுதி புவி அழுத்தம் நிறைந்ததாக உள்ளது.

இங்கு 4 ஆண்டுகளுக்கு தொடர்ந்து வெடிமருந்துகள் வைத்து பாறைகளை தகர்க்கும்போது, என்ன ஆகும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். வெடிவைப்பதால் ஏற்படும் அதிர்வுகளால், 50 கிலோமீட்டர் தூரம் வரை பாதிப்பு ஏற்படும். இடுக்கி அணை, இங்கிருந்து சுமார் 38 கிலோமீட்டர் தொலைவில் தான் உள்ளது.

இந்த ஆய்வுக்கூடத்தால் பாதிப்பு ஏற்பட்டால், தேனி, இடுக்கி மாவட்டத்தின் நில அமைப்பே மாறிவிடும். இந்த திட்டத்தை உடனே நிறுத்தி வைக்க வேண்டும். இத்திட்டத்துக்கு சட்டவிரோதமாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டத்தை இங்கு செயல்படுத்துவதை அரசு கைவிட வேண்டும். இல்லையேல், சட்டரீதியாக இந்த திட்டத்தை நிறுத்த வழக்கு தொடர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story