ரெயில் தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் முதியவர் பிணம் தற்கொலையா? போலீஸ் விசாரணை


ரெயில் தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் முதியவர் பிணம் தற்கொலையா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 11 April 2018 6:15 AM IST (Updated: 11 April 2018 6:15 AM IST)
t-max-icont-min-icon

குழித்துறை அருகே ரெயில் தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் முதியவர் பிணமாக கிடந்தார். யார் அவர்?, கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில்,

குழித்துறை மேற்கு ரெயில் நிலையத்தின் அருகே ரெயில் தண்டவாளத்தில் முதியவர் பிணமாக கிடப்பதாக நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜான், ஏட்டு விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

அப்போது அங்கு சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். ரெயில் தண்டவாளத்துக்கு வெளியே தலையில்லாத உடலும், ரெயில் தண்டவாளத்தின் உள்பகுதியில் துண்டான தலையும் கிடந்தது. அவர் நீலநிற பார்டருடன் கூடிய காவி நிற வேட்டியும், சாம்பல் நிற முழுக்கை சட்டையும் அணிந்திருந்தார். உடலில் இடது மார்புக்கு கீழும், இடது விலாவுக்கு கீழ் பகுதியிலும் கருப்பு மச்சங்கள் இருந்தன.

கொலையா? தற்கொலையா?

போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் எதுவும் உடனடியாக தெரியவில்லை. தலை வேறு, உடல் வேறாக கிடந்ததால் அவர் ரெயில் வரும்போது தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இருப்பினும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ரெயில்மோதி இறந்தாரா? அல்லது கொலை செய்து உடல் தண்டவாளத்தில் வீசப்பட்டதா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

Next Story