காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்க கொடைக்கானல் மலைப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணி


காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்க கொடைக்கானல் மலைப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணி
x
தினத்தந்தி 11 April 2018 6:23 AM IST (Updated: 11 April 2018 6:23 AM IST)
t-max-icont-min-icon

காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்க கொடைக்கானல் மலைப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனச்சரகர் கணேஷ்ராம் தெரிவித்தார்.

பழனி,

பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் சவரிக் காட்டில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் ஏராளமான பட்டா நிலங்கள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு வேளையில் இந்த நிலங்களில் இருந்த மரங்கள், செடி-கொடிகள் தீப்பற்றி எரிந்தன. அதனை பார்ப்பதற்கு காட்டுத்தீ போல் காட்சியளித்தது.

சம்பவம் குறித்து தகவலறிந்த பழனி வனச்சரகர் தலைமையிலான வனப்பாதுகாவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து சென்று அப்பகுதி மக்களுடன் சேர்ந்து தீயை அணைத்தனர். இதன் காரணமாக பட்டா நிலங் களில் பரவிய தீ வனப்பகுதிக் குள் பரவாமல் தடுக்கப்பட்டது.

இது குறித்து வனச்சரகரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

பழனி வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படாமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதே போல் வனப்பகுதியோரத்தில் யாரேனும் எரியும் தன்மையுடைய பொருட்களையோ அல்லது அணைக்கப்படாத தீக்குச்சி, சிகரெட் துண்டுகளை போட்டுச்செல்கின்றனரா? என கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இது தவிர கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள பழனி வன எல்லைப்பகுதியிலும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மலைப்பாதையில் உள்ள தடுப்புகளில் யாரேனும் அமர்ந்து சிகரெட் புகைத்தால் உடனே அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தவும் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் வனத்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். 

Next Story