லாரி டிரைவர் கொலை: ‘அடிக்கடி தகராறு செய்ததால் வேட்டியால் கழுத்தை இறுக்கி கொன்றேன்’ மனைவி பரபரப்பு வாக்குமூலம்


லாரி டிரைவர் கொலை: ‘அடிக்கடி தகராறு செய்ததால் வேட்டியால் கழுத்தை இறுக்கி கொன்றேன்’ மனைவி பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 11 April 2018 7:00 AM IST (Updated: 11 April 2018 6:40 AM IST)
t-max-icont-min-icon

புஞ்சைபுளியம்பட்டியில் லாரி டிரைவர் கொலையான வழக்கில் போலீசில் சரண் அடைந்த அவருடைய மனைவி, கணவர் அடிக்கடி வந்து தகராறு செய்ததால் வேட்டியால் கழுத்தை இறுக்கி கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

புஞ்சைபுளியம்பட்டி,

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி சுபிக்‌ஷா கார்டனை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). லாரி டிரைவர். அவருடைய மனைவி புஷ்பா (46). இவர்களுக்கு நந்தகுமார் (28) என்ற மகன் உள்ளார்.

ராஜேந்திரனுக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவன் மனைவி இருவரும் கடந்த 15 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தார்கள். ராஜேந்திரன் திருப்பூரில் தங்கிக்கொண்டு லாரி ஓட்டி வந்தார். ஆனாலும் அவ்வப்போது ராஜேந்திரன் மதுபோதையில் வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. நந்தகுமார் பெருமாநல்லூரில் கார் பழுது பார்க்கும் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். அங்கேயே தங்கிக்கொண்டு வாரத்துக்கு ஒரு முறை மட்டும் வீட்டுக்கு வந்து செல்வார்.

இந்தநிலையில் புஷ்பா தங்கியிருந்த வீட்டின் எதிரே உள்ள காலி இடத்தில் துணியாலும், சாக்காலும் கட்டப்பட்ட ஒரு மூட்டை நேற்று முன்தினம் இரவு கிடந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீசார் மூட்டையை பிரித்து பார்த்தார்கள். உள்ளே அரை நிர்வாண நிலையில் ஒரு ஆண் பிணம் கிடந்தது. கழுத்து நெரிக்கப்பட்டு யாரோ கொலை செய்யப்பட்டு கிடந்தார்கள்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார்கள். பிணம் கிடந்த இடம் அருகே வசிக்கும் புஷ்பாவை முதலில் போலீசார் அழைத்து பிணத்தை யார் என்று அடையாளம் தெரிகிறதா? என்று கேட்டார்கள். புஷ்பா யார் என்று தனக்கு தெரியவில்லை என முதலில் மறுத்தார். அதன்பின்னர் இறந்து கிடப்பது தன்னுடைய கணவர் என்று கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் புஷ்பாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள்.

இதற்கிடையே நேற்று காலை புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புஷ்பா என்னுடைய கணவரை நான்தான் கொன்றேன் என்று கூறி சரண் அடைந்தார். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் விவரம் வருமாறு:-

என்னுடைய கணவர் என்னை பிரிந்து திருப்பூரில் தங்கிக்கொண்டு லாரி ஓட்டி வந்தார். ஆனாலும் அடிக்கடி மதுபோதையில் வீட்டுக்கு வந்து என்னிடம் தகராறு செய்வார். இதனால் அவரை கொலை செய்துவிடலாமா? என்று எனக்குள் ஆத்திரம் வரும். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு மதுபோதையில் வந்தார். அப்போது என்னிடம் நான் சாணிப்பவுடரை குடித்துவிட்டேன். எனக்கு தாகமாக இருக்கிறது. தண்ணீர் கொடு என்றார். நான் தரமுடியாது என்றேன். உடனே குளியலறைக்கு சென்றார். பின் தொடர்ந்து சென்ற நான் இதுதான் சரியான நேரமென்று என் கணவரின் தலையை பிடித்து குளியலறை சுவற்றில் அடித்தேன். இதில் தலையில் ரத்தம் வழிய மயங்கி விழுந்தார்.

உடனே அருகே கிடந்த காவி வேட்டியை எடுத்து அவருடைய கழுத்தை இறுக்கி கொன்றேன். அதன்பின்னர் துணியாலும், சாக்காலும் உடலை கட்டி எதிரே உள்ள காலி இடத்தில் போட்டுவிட்டேன்.

பின்னர் வீட்டுக்கு வந்து ரத்த கறைகளை கழுவி சுத்தப்படுத்தினேன். ரத்த கறை பட்டிருந்த துணிகளையும் எரித்துவிட்டேன். ஆனாலும் போலீசாருக்கு என்மேல் சந்தேகம் வந்துவிட்டது. அதனால் நானே சரண் அடைந்துவிட்டேன் என்றார்.

அதைத்தொடர்ந்து புஷ்பாவை கைது செய்த போலீசார் அவரை சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்கள். 

Next Story