தேர்வு தேதியை மறந்ததால் பிளஸ்-1 மாணவர் தற்கொலை


தேர்வு தேதியை மறந்ததால் பிளஸ்-1 மாணவர் தற்கொலை
x
தினத்தந்தி 11 April 2018 7:06 AM IST (Updated: 11 April 2018 7:06 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே, தேர்வு தேதியை மறந்ததால், பிளஸ்-1 மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த ஏனிபெண்டா கிராமத்தை சேர்ந்தவர் பழனி, கூலித்தொழிலாளி. இவருடைய மகன் பரமசிவம் (வயது 16). இவர் நெல்குந்தி கிராமத்தில் உள்ள தன் மாமா வீட்டில் தங்கியிருந்து, தேன்கனிக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ்-1 படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம், பள்ளியில் வரலாறு பொதுத்தேர்வு நடந்தது. இந்த தேர்வை எழுத மாணவர் பரமசிவம் மறந்து வீட்டிலேயே இருந்துள்ளார். பின்னர் தேர்வு நடந்ததை தெரிந்து கொண்ட பரமசிவம், பெற்றோர் மற்றும் மாமாவுக்கு தெரிந்தால் திட்டுவார்கள் என பயந்து, பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டு மயங்கி கிடந்தார்.

பரிதாப சாவு

இதை கண்ட அக்கம் பக்கத்தினர், மாணவனை மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனிறி மாணவன் பரமசிவம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story