காவிரி பிரச்சினையில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து கபட நாடகமாடுகிறது திருமாவளவன் குற்றச்சாட்டு


காவிரி பிரச்சினையில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து கபட நாடகமாடுகிறது திருமாவளவன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 11 April 2018 7:47 AM IST (Updated: 11 April 2018 7:47 AM IST)
t-max-icont-min-icon

காவிரி பிரச்சினையில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து கபட நாடகமாடுகிறது என்று காவிரி உரிமை மீட்பு பயணத்தில் திருமாவளவன் கூறினார்.

திருவையாறு,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி காவிரி உரிமை மீட்பு பயணத்தை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டம் முக்கொம்பில் இருந்து தொடங்கினார்.

இதேபோல மற்றொரு குழுவினர் காவிரி உரிமை மீட்பு பயணத்தை அரியலூரில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் தொடங்கினார்.

நேற்று திருவையாறு வந்த இக்குழுவினருக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசினார்.

அப்போது அவர் பேசிய தாவது:-

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்திவிட்டு மத்திய ஆட்சியாளர்கள் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டின் கதவை தட்டுகிறார்கள். காவிரியில், தமிழகத்தின் உரிமையை ஒரு போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரும்போது மு.க. ஸ்டாலின் கூறியபடி அவருக்கு கருப்புக்கொடி காட்ட வேண்டும். காவிரி உரிமைக்காக போராடுபவர்கள் எங்கு நோக்கினும் கருப்புக்கொடி கட்டி நமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.

மோடி விமான நிலையத்தில் இறங்கி பார்க்கும்பொழுது தமிழகமே கருப்பாக தெரிய வேண்டும். அந்த அளவுக்கு இந்த போராட்டத்தை நாம் அனைவரும் நடத்த வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கல்யாணசுந்தரம், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வறண்டு கிடக்கும் கொள்ளிடம், காவிரி ஆறுகளை திருமாவளவன், பாலகிருஷ்ணன், முன்னாள் மத்திய மந்திரி ராசா ஆகியோர் பார்வையிட்டனர்.

பின்னர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறிய தாவது:-

மோடி அரசு 8 கோடி தமிழ் மக்களுக்கு ஓரவஞ்சனை செய்து வஞ்சித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதாக கூறி காலம் தாழ்த்தி வருகிறது.

தமிழகத்தில் அனைத்து எதிர்கட்சிகளும் ஓர் அணியில் திரண்டு உள்ளது. ஆனால் அ.தி.மு.க. அரசு, ஜெயலலிதா மறைவுக்கு பின் கட்சியை வழி நடத்த ஆளுமை இல்லாமல் தடுமாறி வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை காலாவதியாக்கி விட்டு மீண்டும் காலநீட்டிப்பு செய்துள்ளனர். இவர்கள் காலம் கடத்துவார்களே தவிர காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கமாட்டார்கள். காவிரி பிரச்சினையில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து கபட நாடகமாடி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story