சாலை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் தர்ணா கலெக்டர் காரை நிறுத்தி கோரிக்கை மனு


சாலை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் தர்ணா கலெக்டர் காரை நிறுத்தி கோரிக்கை மனு
x
தினத்தந்தி 11 April 2018 7:49 AM IST (Updated: 11 April 2018 7:49 AM IST)
t-max-icont-min-icon

நல்லம்பள்ளி அருகே, சாலை வசதி செய்து தரக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், அவ்வழியாக வந்த கலெக்டர் காரை நிறுத்தி அவரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

நல்லம்பள்ளி,

நல்லம்பள்ளி அடுத்த மிட்டாதின்னஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட கொமத்தம்பட்டியில் இருந்து பூமரத்தூர் வத்தல்மலை அடிவாரம் வரை 3 கி.மீ. தூரம் தார்சாலையின் இருபுறமும் சுமார் 70-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய பாசனநிலங்கள், அரசு தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி குழந்தைகள் மையம் ஆகியவையும் உள்ளது.

இந்த தார்சாலை வழியாக நாள்தோறும் வத்தல்மலை சுற்றுலா தலத்திற்கு செல்லும் பயணிகள் மற்றும் வத்தல்மலையில் வசிக்கும் பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்ட கார், வேன் மற்றும் இருசக்கர வாகனங்கள் மூலம் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் இச்சாலை கடந்த ஆண்டு பெய்த கனமழையால் பல இடங்களில் அரிப்பு ஏற்பட்டு, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, குண்டும் குழியுமாக மாறி, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது. இதையடுத்து அதிகளவு அரிப்பு ஏற்பட்ட இடங்களில் மட்டும் கற்களையும், மணல் முட்டைகளை அடுக்கி சாலையை முழுவதும் சீர்செய்தது போல் கண்துடைப்பு செய்யப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

ஆனால் தற்போது வரை இந்த சாலை முழுமையாக சரி செய்யப்படாததால் பெரும்பாலான வாகனஓட்டிகள், அரசு பள்ளிக்கு மிதிவண்டிகளில் செல்லும் மாணவ- மாணவிகள் விபத்துக்களில் சிக்கி காயமடைந்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பழுதான சாலையை சீர்செய்யக்கோரியும், பூமரத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு தார்சாலை மற்றும் கான்கிரீட் சாலைகள் அமைத்து தரக்கோரியும், பூமரத்தூரில் பழுதான சாலையில் அமர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று திடீர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

அப்போது வத்தல்மலைக்கு ஆய்வுக்கு சென்றுவிட்டு அந்த வழியாக திரும்பிய தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழியின் காரை, தர்ணாவில் ஈடுபட்டவர்கள் நிறுத்தி தங்களது கோரிக்கை மனுவை அவரிடம் கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், உரிய விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

முன்னதாக கொமத்தம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் பூமரத்தூர் அரசு தொடக்கப்பள்ளிகளில் நேற்று மாவட்ட கலெக்டர் மலர்விழி சத்துணவு மையத்தை ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். 

Next Story