தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் பணிகள் 2 ஆண்டுகளில் முடிக்கப்படும் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டப்பணிகள் 2 ஆண்டுகளில் முடிக்கப்படும் என கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
இட்டமொழி,
நாங்குநேரி, ராதாபுரம் உள்ளிட்ட வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில், தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டப்பணிகள் 2 ஆண்டுகளில் முடிக்கப்படும் என கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
வெள்ளநீர் கால்வாய் திட்டம்
நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் மழை காலங்களில் வெள்ளம் ஏற்பட்டு பெரும்பாலான தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. இப்படி வீணாகும் தண்ணீரை ஆற்றில் தடுப்பணை அமைத்து, தனியாக கால்வாய் தோண்டி வறட்சியால் பாதிக்கப்படும் நாங்குநேரி, ராதாபுரம், சாத்தான்குளம் பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வகையில் வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
இதற்காக, கால்வாய் தோண்டும் பணியை நான்கு கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, முதல் 2 கட்ட பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. 3 மற்றும் 4-ம் கட்ட பணிகள் கிடப்பில் போடப்பட்டு இருந்தது.
கலெக்டர் ஆய்வு
இந்த 2 கட்ட பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது. இந்த பணிகள் தொடங்க உள்ள மூலைக்கரைப்பட்டி அருகே பெருமாள்நகர் பகுதியில் நேற்று நெல்லை கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார். அவருடன் இன்பதுரை எம்.எல்.ஏ.வும் சென்றார். அந்த பகுதியில் கால்வாய் பணிகள் நடைபெறுவது குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளநீரை தனிக்கால்வாய் அமைத்து வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லும் நதிநீர் இணைப்புத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மணிமுத்தாறு பகுதியில் இருந்து 4 கட்டங்களாக 75 கி.மீ. தொலைவுக்கு தனிக்கால்வாய் அமைக்கப்படுகிறது.
2 ஆண்டுகளில் முடிக்கப்படும்
இதில் தற்போது 39 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் தோண்டப்பட்டு உள்ளது. இனி 3-ம் கட்டமாக 13 கி.மீ. தொலைவுக்கும், 4-ம் கட்டமாக நம்பி ஆற்றுடன் இணைப்பு கால்வாய் 12 கி.மீ. தொலைவுக்கும், ஆக மொத்தமாக 25 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் தோண்டும் பணி நடைபெற உள்ளது. இதற்கான சர்வே, தொழில்நுட்ப குழு சான்றிதழ், நிர்வாக கமிட்டி சான்றிதழ்கள் பெறப்பட்டு விட்டன. தமிழக அரசும் பட்ஜெட்டில் ரூ.100 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. என்னிடம்(கலெக்டர்), தமிழக முதல்-அமைச்சர் நதிநீர் இணைப்பு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டு உள்ளார். இன்னும் 2 மாதங்களில் கால்வாய் பணிகள் தொடங்கப்படும். அடுத்த 2 ஆண்டுகளுக்குள் கால்வாய் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
கால்வாய் தோண்டும் நிலம் வழங்கியவர்களுக்கு பணம் வழங்க போதிய நிதி கையிருப்பில் உள்ளது. ஏற்கனவே நிதி வழங்கப்பட்டது போக, மீதி உள்ளவர்களுக்கு பணம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்பதுரை எம்.எல்.ஏ.
இன்பதுரை எம்.எல்.ஏ. கூறுகையில், ‘வறட்சியான இப்பகுதிகளை செழிப்பாக்கும் வெள்ளநீர் கால்வாய் நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த சாத்தான்குளம் இடைத்தேர்தலின் போது அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். அதன்படி, முதல் 2 கட்ட பணிகள் முடிக்கப்பட்டு, தற்போது கால்வாய் முழுமையாக தோண்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. கால்வாய் பணி முடிந்ததும் நாங்குநேரி, ராதாபுரம், சாத்தான்குளம் பகுதிகள் செழிப்பாகும்’ என்றார்.
இந்த ஆய்வின்போது சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ், நாங்குநேரி தாசில்தார் வர்க்கீஸ், நதிநீர் இணைப்பு சிறப்பு திட்டம் கோட்ட செயற்பொறியாளர் ஞானசேகர், உதவி செயற்பொறியாளர்கள் வேலையா, கணபதி, ரமேஷ், நாகராஜ், ஜெயசுதா, ஆக்னஸ் ராணி, உதவி பொறியாளர்கள் நந்தினி, ராமகிருஷ்ணன், விசாலாட்சி, முத்துசாமி, வள்ளியூர் ஒன்றிய செயலாளர் அழகானந்தம், ராதாபுரம் ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, ஒன்றிய இளைஞரணி செயலாளர் முருகேசன், வள்ளியூர் நகர துணை செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை தலைவர் எட்வர்ட் சிங், எம்.எல்.தேரி விவசாய சங்க தலைவர் சுதாகர் பாலாஜி, பொருளாளர் குங்குமம் பாஸ்கர், துணை தலைவர் பூபதி பாண்டியன், கவுரவ ஆலோசகர் முருகையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story